புதன், 1 ஜனவரி, 2014

ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்

பேனா என் வாழ்வில் முன்னேற்றத்திற்கு வித்திட்ட ஒரு உபகரணம். ஆனால் பேனாவின் பயன்பாடு தற்பொழுது குறைந்து கொண்டே வருகிறது.

பேனாவை வைத்து ஒரு ரெண்டு வரிகள் எழுதி பல நாட்கள் ஆகிறது. முன்பெல்லாம் பரீட்சை எழுதுவதற்கு, விடுதியிலிருந்து வீட்டிற்கு கடிதம் எழுதிய போதும், பதின்ம வயதில் காதல் கடிதம் வரைந்த போதும், ஓவியம் தீட்டவும், கவிதை எழுதவும், பல சரக்கு சாமான் (உ.பருப்பு, ந.எண்ணெய்) எழுதுவும், வாரமலர் குறுக்கெழுத்து கட்டங்கள் நிரப்பியதும்.....இப்படி எண்ணற்ற செயல்கள் பேனாவினால் தான் முடிந்தது.

பள்ளி பருவத்திலிருந்து கல்லூரி பருவம் வரை, பேனா எனது நண்பனாக இருந்தது. மை பேனா, பந்து முனை (பால் பாயிண்ட்) பேனா, ஹீரோ பேனா, ஸ்கெட்ச் பேனா, ஜெல் பேனா என்று பல கால கட்டத்தில் பயன்படுத்தி வந்தேன். அதுவும் பரீட்சை எழுதும் போது சொல்லவா வேண்டும், இரண்டு பேனாக்களில் மையினை நிரப்பி கொண்டு செல்வேன். பதில் தெரிந்த கேள்விகளுக்கு ஒரு பக்கமும், பதில் தெரியாத கேள்விகளுக்கு கற்பனை குதிரையை தட்டி விட்டு நான்கு பக்கங்களும் எழுதி விடுவேன். அலைகள் ஓய்வதில்லை படத்தில் "ஆயிரம் தாமரை" பாடலில் வரைமுத்து "இது தீயின் ஊற்று...இங்கு தேனை ஊற்று", என்று சொன்னது போல பேனா என்பது "கற்பனையின் ஊற்று...இதில் மையினை ஊற்று" என்று பேனாவை பயன்படுத்தினேன் 

நாகரீக வளர்ச்சி மற்றும் அறிவியலின் தாக்கத்தாலும், சில பொருட்களின் மவுசு குறைந்து கொண்டு வருகிறது. தந்தி சேவை நிறுத்த பட்டது போல, இந்த டிஜிட்டல் யுகத்தில் பேனாவின் பயன்பாடும் கொஞ்ச நாளில் மறைந்து விடும் போல இருக்கிறது. மின்னஞ்சல் மற்றும் அலை பேசி வந்த வந்த பிறகு, யாரும் பேனா மூலம் கடிதம் எழுதி தகவல் பரிமாற்றம் செய்வதில்லை. இதில் இன்னொரு கொடுமை விலாசத்தை கூட கடித உறையின் (என்வலப்) மேல எழுதாமல், பிரிண்டரில் அச்சடித்து ஒட்டுகின்றனர். வளர்ந்து வரும் நிறுவனங்களில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு பணிக்கு செல்வதற்கு பதிலாக, பிங்கர் பிரிண்ட் சிஸ்டமில் விரல் ரேகையை வைத்து விடுகின்றனர். கடிதம் மற்றும் விலைபட்டியல் கீழே கையெழுத்து போடுவதற்குக் பதிலாக டிஜிட்டல் சிக்னேச்சர் என்று கையெழுத்தை ஸ்கேன் செய்து, அச்சடிக்கும் போது இணைத்து விடுகின்றனர். நான் பேனாவை பேருக்கு மட்டும் தான் வைத்துள்ளேன்.

நேரு அவர்கள் சிறையில் இருக்கும் போது கடிதம் மூலமாக இந்திரா காந்தி அவர்களுக்கு சுதந்திர வேட்கையை வளர்த்து விட்டவர். கத்தி முனையை விட பேனா முனை வலிமையானது. ஆனால் பேனா தற்பொழுது அதன் வலிமையை இழந்து வருகிறது.

முன்பு விரல்களில் பேனாவை வைத்திருந்த காலம் சென்று, இப்பொழுது விரல்களே பேனாவாக மாறிவிட்டது (டச் ஸ்க்ரீன்). மிஸ் யூ மை டியர் பேனா....

தொலைந்து விட்டது என் பேனா - இல்லை
தொலைத்து விட்டேன் என்பேனா?


- ரெங்க ராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக