சனி, 18 ஜனவரி, 2014

நையாண்டி - பகுதி 4

தமிழ் மொழியில் சங்க கால இலக்கியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள், சிற்றுலக்கியங்கள் என்று ஏக பட்ட நூல்கள் இருக்கின்றன. இவற்றுள் நமக்கு வாழ்வியல் நெறிமுறைகளை இரண்டு அடியில் தெளிவாக எடுத்துரைப்பது திருக்குறள். சமிபத்தில் நான் படித்த திருக்குறள் (குறள்: 484 - அதிகாரம்: காலம் அறிதல்) 

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்


பொருள்: உலகத்தையே வென்று கைகொள்ள வேண்டுமானால் உரிய காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து அறிந்து செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு மிக நுட்பமான விசயங்களை இரண்டே வரியில் திருவள்ளுவர் சொல்வது மிகவும் சிறப்பானது. திருக்குறளின் அருமை உணர்ந்த இடைக்காடர் "கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ - என்று புகழ்ந்து பாடினார். இதில் ஒரு படி மேல சென்று ஔவையார் "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் - என்று புகழாரம் சூட்டுகிறார்.

திருக்குறளை புகழ்ந்து சொன்னால் மட்டும் போதுமா? அதன் பெருமையை பறைசாற்ற நமது தமிழகத்தில் ஒரு தமிழ் அறிஞர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவரின் முயற்சி மிகவும் பாராட்ட தக்கது. அந்த தலைவர் சொன்ன விஷயம் "நீதிமன்றங்களில் கீதை-குரான்-பைபிள் போன்ற நூல்களுக்கு பதிலாக திருக்குறளை வைத்து சத்திய பிரமாணம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறிய இந்த நிபந்தனை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த முது வயதில் கூட தொல்காப்பியத்திற்கும் உரை எழுதுகிறார். தமிழுக்கும் தமிழருக்காக வாழும் தலைவர் அவர்.

(முன்பு சொன்னது போல நையாண்டி பதிவுகளில் புலிகேசி மன்னர் வருகை தருகிறார். அவருக்கு துணையாக அடியேன் அமைச்சராக வலம் வருகிறேன்)

புலிகேசி: அமைச்சரே...நீர் சொன்ன அந்த தலைவர் யாரென்று எனக்கு தெரியும். அவரின் பேச்சை கேட்டு தான், திரை வானில் சிறகடித்து கொண்டிருந்த நான் இப்பொழுது சிறகொடிந்த பறவையாகி விட்டேன். நீர் சொன்ன அந்த தலைவரும் திருக்குறளுக்கு தெளிவுரை எழுதியுள்ளார் தெரியுமா?  

அமைச்சர்: ஆமாம் மன்னா..அது தவிர தனது தொண்டர்களை வள்ளுவர் சொன்னது போல வாழ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

புலிகேசி: சரி அமைச்சரே. திருக்குறளுக்கு உரை எழுதியவர் அறத்து பாலில் பதினைந்தாவது அதிகாரத்தை (பிறனில் விழையாமை) மறந்து விட்டாரா?

அமைச்சர்: மன்னா...தாங்கள் சொல்வது ஒன்றும் புரிய வில்லையே..

புலிகேசி: அமைச்சரே...நீர் மணிக்கு ஒருமுறை மங்குனி அமைச்சர் என்பதை நிருபித்து கொண்டு இருக்கிறீர். நாடகம் நடிக்க வந்த அடுத்தவரின் மனைவியை தனது துணைவியாராக வைத்து கொண்ட தலைவர்....ப்படி "பிறனில் விழையாமை" (பிறரின் மனைவியை விரும்பாமை) என்ற அதிகாரத்திற்கு தெளிவுரை எழுதி இருப்பார். மேலும் வள்ளுவர் சொல்படி வாழ வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் சொல்வது சற்று நகைப்புக்குரியதாக இருக்கிறது.

அமைச்சர்: ஒருவேளை தனது அதிகாரத்தால் அவர் அந்த அதிகாரத்தையே மறந்திருக்கலாம். விடுங்கள் மன்னா...இன்று உயர் பதவியில் இருக்கும் சில அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் குறிப்பாக சில காக்கி சட்டை போட்ட மச்சான்களும், சில நடிகர்களும் "அடுத்தவர் பட்டா போட்ட இடங்களிள் தான் கொட்டா போடுகிறார்கள்".

புலிகேசி: அமைச்சரே, அந்தரங்கம்...அந்தரங்கமாக இருந்தால் பிரச்சனை இல்லை. அது அம்பல படுத்த பட்டால் தான் பிரச்சனை. ஒரு சாமியார் இன்னொரு திருமணம் முடிந்த நடிகையுடன் ரகசியமாக இருந்தது அம்பல படுத்த பட்டது. ஒரு தலைவர் அல்லது சாமியார், சாமானியராக இருந்தால் பிரச்சனை இல்லை. தவறு செய்யும் அவர்கள் ஊருக்கு உபதேசம் செய்யும் பொழுது தான் அவரின் அந்தரங்கம் மக்களால் விமர்சிக்க படுகிறது. 

அமைச்சர்: இங்கு நாட்டில் பல அந்தரங்கங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. ஒரு சில அந்தரங்க விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்து விடுகின்றது. ஆனால் பலரும் தங்களின் அந்தரங்களை மறந்து....மற்றவரின் அந்தரங்கத்தை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். மேலும் அம்பலமான சிலரின் அந்தரங்கம் பற்றி விவாதிக்கும் பல நபர்களின் (so called people) அந்தரங்கம் என்பது......யாருக்கும் தெரியாமல் அவர்கள் நிறைவேற்றி கொண்டதாக இருக்கும் அல்லது அவர்களின் நிறைவேறாத ஆசையாக இருக்கும்.

புலிகேசி: ஆமாம் அமைச்சரே...பல லகுட பாண்டியர்கள்கள் தாங்கள் செய்த தவறை மறந்து மற்றவரின் தவறுகளை விமர்சிக்கிறார்கள். தவறு செய்பவர்களுக்கு உடனே சரியான தண்டனை கிடைப்பதில்லை. மற்றவரின் உடமைகளை அபகரிப்பவர்கள் தற்பொழுது வேண்டுமானால் சந்தோசத்துடன் இருக்காலம். ஆனால் பிற்காலத்தில் மிகவும் கஷ்டபடுவார்கள் என்று அதர்வண வேதத்தில் சொல்ல பட்டிருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும் அமைச்சரே...நீங்கள் எப்படி?

அமைச்சர்: மன்னா...ஐயம் வேண்டாம். நான் ஏகபத்தின விரதன். பெண்ணை பார்த்தால் மண்ணை பார்த்து நடந்து செல்கிறேன். தாங்கள் என்னை அந்தபுரம் பக்கம் அனுமதிப்பதில்லை. அதற்கு மேல என் மனைவி, சமிபத்தில் தொலைகாட்சியில்...நீங்கள் கைபிள்ளையாக இருந்த சங்கத்தின் (வ.வா.சங்கம்) பெயரில் வெளிவந்த திரைப்படம் பொங்கலன்று ஒளிபரப்ப பட்டது. படத்தில் ஒரு பாடல் காட்சியை உன்னிப்பாக பார்த்து கொண்டிருந்தேன். அப்பொழுது எனது மனைவி "ஏங்க இங்க பாருங்க" என்று மூன்று முறை சொன்னது கவனிக்காமல பாடலில் நாயகி "பார்க்காதே பார்க்காதே...அய்யயோ பார்க்காதே" என்பதை கவனித்து கொண்டிருந்தேன். விளைவு இங்கே பாருங்கள்...முகம் கொழுக்கட்டை மாதிரி வீங்கி இருக்கிறது. வள்ளுவராவது ரெண்டு அடியில் (குறள்) சொல்லி புரிய வைப்பார்....ஆனால் மனைவியோ ஒரே அடியில் புரிய வைத்து விட்டார். இருக்கட்டும் மன்னா...உங்களின் கனவு கன்னி நயன்தாரா என்ன ஆனார்.

புலிகேசி: அமைச்சரே...நான் தலை நகரத்தில் கூறியது போல (என் அடுத்த டார்கெட் நயன்தாரா) அவரிடம் சென்று எனது விருப்பத்தை சொன்னேன். ஆனால் இந்த சிம்பு என்ற ஒரு சிறுவன் அடிக்கடி வம்பு செய்து கொண்டிருக்கிறான். சரி அடுத்து திரிஷாவை தேடி சென்றேன். அவரை இங்கு தமிழகத்தில் காணவில்லை. இப்பொழுது வெங்காயத்திற்கு இருக்கும் மார்க்கட் கூட திரிஷாவிற்கு இங்கு இல்லை. பிறகு ஒரு வழியாக அவரை ஆந்திராவில் பார்த்து விட்டு எனது விருப்பத்தை தெரிவித்தேன். ஆனால் திரிஷா என்ன பார்த்து நீ "வேணா" என்று கூறி விட்டு "ராணா" என்ற நடிகரிடம் தஞ்சம் அடைந்துள்ளார். 

அமைச்சர்: விடுங்கள் மன்னா...நீங்கள் கூறியது போல திரிஷா இல்லாவிடில் திவ்யா இருக்கிறாரே. நான் மேலே சொன்ன நமது சங்கத்தின் பெயரில் வந்த படத்தின் நாயகி பெயர் கூட திவ்யா தான் (ஸ்ரீ திவ்யா). இந்த முறை அவரின் தந்தையை அணுகி உங்களின் விருப்பத்தை கூறி சுயவரத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.

புலிகேசி: அமைச்சரே...உங்களின் எண்ணமும் செயலும் அப்படியே என்னை போலவே இருக்கிறது. ஆனால் திவ்யா-வின் தந்தை யாரென்று தெரியவில்லையே. சரி நானே திவ்யாவிடம் கேட்டு விடுகிறேன்.

ஊதா கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்
நீ சொல்லடி நான் அவனுக்கு சலாம் போடணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக