திங்கள், 27 ஜனவரி, 2014

திக் திக் திக்


எத்தனை செல்வங்கள் இருந்தாலும் குழந்தை செல்வத்திற்கு அது ஈடாகாது. ஆனால் சில பெற்றோர்கள் குழந்தைகள் நலனில், படிப்பில் மற்றும் அவர்கள் பாதுகாப்பில் அக்கறை எடுத்து கொள்வதில்லை. சமிபத்தில் குழந்தைகள் பற்றி வந்த திரைபடங்கள் தங்க மீன்கள், 6 மெழுகு வர்த்திகள் மற்றும் விடியும் முன். இந்த மாதிரி படங்கள் பொழுது போக்கிற்காக எடுக்க பட்ட திரைப்படங்கள் அல்ல...குழந்தைகளின் விழிப்புணர்விற்காக எடுக்க பட்ட படங்கள்.

தங்க மீன்கள் படத்தில் குழந்தைகளின் கல்வி, குழந்தைகளின் புரிந்து கொள்ளும் திறன் (Capacity) மற்றும் அதற்கான சூழ்நிலை பற்றி எடுக்க பட்டது. இந்த படம் குழந்தைகளின் படிப்பு சம்பந்த பட்டது, இது சாதாரணமான விஷயம் தான். ஆனால் ஷ்யாம் நடித்த 6 மெழுகு வர்த்திகள் மற்றும் பூஜா நடித்த விடியும் முன் போன்ற படங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பற்றி எடுக்க பட்ட படங்கள். இப்படியெல்லாம் நாட்டில் நடக்கிறது என்று பலருக்கும் தெரியாது. இந்த படங்களை பார்த்தால் உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு மேலே 
அதிக கவனம் செலுத்துவீர்கள். இது விமர்சனம் மட்டுமல்ல...ஒரு விழிப்புணர்வு பதிவு, முழுவதும் படியுங்கள்.

6 மெழுகு வர்த்திகள் : படம் பார்க்கின்ற உணர்வினை மறந்து ஒவ்வொரு காட்சியும் பதற வைத்து ஈரகுலை நடுங்க வைத்த படம். முதலில் படம் ஆரம்பித்து எட்டு நிமிடம் மட்டும் தான் சந்தோசம்....பிறகு அனைத்தும் சஸ்பென்ஸ் த்ரில்லர். ஷ்யாம் மற்றும் பூனம் தம்பதியரின் ஒரே மகனின் (கெளதம்) ஆறாவது பிறந்த நாளை கொண்டாடி விட்டு..கடற்கரைக்கு செல்கின்றனர். அங்கு கவன குறைவால் மகனை தொலைத்து விடுகின்றனர். குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் பெரிய நெட்வொர்காக செயல்படும் மாபியா கும்பல், ஷ்யாமின் மகனை கடத்தி ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடம் மாற்றுகிறது. மகனை தேடி ஒவ்வொரு மாநிலமாக சென்று நிறைய வில்லன்களுடன் மோதி உயிரை பணயம் வைத்து மகனை மீட்டெடுக்கிறார். ஷ்யாமிற்கு வாழ்நாளில் இந்த ஒரு படம் போதும்...அவரின் நடிப்பை பாராட்ட. மனிதர் குழந்தை மேல எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார். முகம் கண்ணெல்லாம் வீங்கி பைத்திய காரனை போல வட மாநிலங்களில் மகனை தேடும் காட்சி நெகிழ செய்கிறது. 

மகனையும் தொலைத்து...அவனை தேடி சென்ற ஷ்யாம் பற்றி எந்த விபரம் தெரியாமல் மனைவி பூனம் தவித்து கொண்டிருப்பார்...அப்பொழுது ஷ்யாம் தொலைபேசியில் அழைக்கும் போது, பூனம் மனவேதனையுடன் ஷ்யாமிடம்...கௌதமும் இல்லாமல் நீயும் இல்லாமல் என்னால இருக்க முடியல, நீயாவது கிளம்பி வந்து விடு...உனக்கு எத்தனை பிள்ளை வேணாலும் பெத்து தரேன் என்பார் அதற்கு ஷ்யாம், கௌதம் இல்லாம, நாம வித விதமா துணிய கட்டிக்கிட்டு...நல்ல சாப்பிட்டு சந்தோசமா இருக்க சொல்றியா? என்று சொல்லிவிட்டு தேடுதல் வேட்டையை தொடர்வார். இறுதியாக கொல்கத்தாவில் மகனை தேடி செல்லும் ஒரு இடத்தில் அனைத்து மொழி பேசும் குழந்தைகள் அடைக்க பட்டிருப்பார்கள்..அவர்கள் அனைவரும் ஷ்யாமின் காலை பிடிச்சு கெஞ்சுவதை பார்க்கும் போது இதயம் ரணமாகி விடும். அங்கிருக்கும் மகனை அடையாளம் காண முடியாமல் (பல வில்லன்களிடம் மாட்டி சித்தரவதை செய்ய பட்ட ஷ்யாமின் மகன் ஆளே மாறி போயிருப்பான்....அது போல மகனை பல மாதமாக தேடி ஷ்யாமின் தோற்றமும் மாறி இருக்கும்) தவிக்கும் காட்சி...பிறகு மகனை அடையாளம் கண்டு அணைக்கும் காட்சி கண்ணில் நீரை வரவைத்து விடும்.

விடியும் முன் : மேலே சொன்ன படத்தில் குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கும்பல் போல, இந்த படத்தில் பாலியல் தொழிலில் சிறுமிகளை ஈடுபடுத்துவது மற்றும் அதிலிருந்து விடுபட முயலும் ஒரு சிறுமி (மாளவிகா மனிகுட்டன்) மற்றும் பாலியல் தொழிலாளி ரேகா (பூஜா), அவர்களை துரத்தும் மூன்று சமூக விரோத கும்பலிடம் இருந்து விடுபடுவது தான் கதை.

பாலாவின் பரதேசி படத்திற்கு கால்சீட் கொடுக்காமல், பூஜா இந்த படத்தில் சிறப்பான நடிப்பை தந்திருப்பார். படத்தில் பூஜாவை வைத்து முன்பு தொழில் செய்த ஒரு புரோக்கர், என்ன ரேகா (பூஜா) முன்ன மாதிரி இப்ப தொழில் செய்ய வரமாட்டுகிற என்று சொல்வார்...அதற்கு பூஜா, இல்ல சிங்காரம் இப்ப வயசாகிடுசுல்லா என்று விலகி செல்கிறார். பிறகு அந்த புரோக்கர் பூஜாவிடம், ஒரு பெரிய புள்ளிற்கு சிறுமியை ஏற்பாடு செய்ய சொல்கிறார். பூஜா சில நிர்பந்தத்தினால...தான் வேலை பார்த்த இன்னொரு புரோக்கர் துரை சிங்கம் என்பவனிடம் இருந்து சிறுமியை அழைத்து வந்து....பெரும்புள்ளிக்கு ஏற்பாடு செய்கிறார். இறுதியில் தான் செய்வது தவறு என்று உணர்ந்து அந்த சிறுமியை பெரும்புள்ளியிடம் இடமிருந்து காப்பாற்றும் தருணத்தில், அந்த சிறுமி மற்றும் பூஜா இருவரும் அந்த காமுகனை கொலை செய்து விட்டு தப்பி விடுகின்றனர். இந்த இருவரை பிடிக்க...சிங்காரம் குரூப், துரைசிங்கம் குரூப் மற்றும் பெரும்புள்ளியின் மகன் & அடியாட்கள் துரத்துகின்றனர். இறுதியில் கிளைமேக்ஸ் என்ன நடக்குமோ என்று நினைக்கையில் யாரும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் இனிதே முடிவடைகிறது.

6 மெழுகு வர்த்திகள் மற்றும் விடியும் முன், குழந்தைகளுக்கு எதிராக நிழல் உலகில் நடக்கும் கொடுமைகளை பற்றி கூறுகிறது. குழந்தைகளை பெற்று படிக்க வைத்தால் மட்டும் நம் கடமை முடிந்து விடாது...அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளிடம் தினமும் கொஞ்ச நேரம் செலவழியுங்கள். கிராமத்தில் இருக்கும் பெற்றோர்கள் கூட குழந்தைகளை பார்த்து, அங்கே இங்கே நிக்காதே...பிள்ளை பிடிக்கிறவன் தூக்கிட்டு போயிருவான், யாரு எது கொடுத்தாலும் வாங்கி திங்காதே, பிறகு குறிப்பா பெண் குழந்தைகளை பார்த்து விளக்கேற்றும் நேரத்திற்குள் வீட்டிற்கு திரும்பி வந்து விடு....இந்த மாதிரி சாதாரண விசயங்களை கூட நகரத்தில் இருக்கும் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு சொல்வதில்லை. நாட்டில் நடக்கும் விசயங்களை கொஞ்சம் நாசுக்காக கூறி விழிப்புரனர்வை ஏற்படுத்துங்கள். நாம் வசிக்கும் இடம், வீட்டின் விலாசம், அம்மா அப்பா மொபைல் நம்பர் போன்றவற்றை மறக்காமல் சொல்லி கொடுங்கள்

சில பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்த படுகிறார்கள். சும்மா ஸ்கூலுக்கு போனியா...ஹோம் வொர்க் பண்ணிட்டியா என்று மட்டும் கேக்காமல், அவர்களின் தேவை மற்றும் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்று கேளுங்கள். மேலும் குழந்தைகளுக்கு தொடுகை பற்றி சொல்லி தாருங்கள், அதாவது குட் டச், பேட் டச் என்று கூறி கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க சொல்லுங்கள்....இது இச்சை கொண்டிருக்கும் சில வாலிப வயது நண்பர், உறவினர், ஆசிரியர் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் நபர்களிடமிருந்து கவனமாக இருக்க செய்யும்...குறிப்பாக சில கிழட்டு கபோதிகளிடமிருந்தும் கூட.

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சரியான சட்டம் இயற்ற படவில்லை. டெல்லி மாணவி விசயத்தில் கூட...முதலில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என்று சொன்னார்கள். மேலும் குற்றம் புரிந்த இன்னொரு நபரின் வயதை காரணம் காட்டி...அவனை சிறுவன் என்று தண்டனை விலக்கு கொடுக்க பட்டது...பிறகு ஜுவனைல் சட்டம் பதினெட்டு வயதிலிருந்து...பதினாறு வயதாக குறைக்க பட்டு விடுபட்ட நபரையும் குற்றவாளியாக்க பட்டது. பிறகு நீதிபதி வர்மா கமிட்டி கூடி ஆலோசித்து கெமிக்கல் கேஷ்ட்ரேஷன் (வேதியல் முறையில் பாலியல் உறுப்புகளை செயலிழக்க செய்வது) தண்டனை பரிந்துரைக்க பட்டது....பிறகு அந்த தண்டனை நிராகரிக்க பட்டு, வெறும் ஆயுள் தண்டனையாக இருக்கிறது. பிறகு எப்படி குற்றங்கள் குறையும்...தவறு செய்யும் நபர்கள் எப்படி பயப்படுவார்கள். 

எதுக்குடா கெமிக்கல் கேஷ்ட்ரேஷன் சொல்றீங்க...இருக்கவே இருக்கு பிசிக்கல் கேஷ்ட்ரேஷன் (காயடிப்பு), கிராம புறங்களில் சில மிருகங்களுக்கு செய்ய படும் முறை. பின்னங்காலை தூக்கி கொண்டு நங்குன்னு நாலு அடி...அவ்வளவு தான், அது போல சில மனித மிருகங்களுக்கும் செய்ய வேண்டும் (உச்சா மட்டும் தான் இருக்க முடியும் வேறு ஒன்றும் முடியாது). இதை கேலியாக எடுத்து கொள்ள வேண்டாம். பாதிக்க பட்ட குழந்தைகளின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினரா இருந்து சிந்தித்து பாருங்கள். பதின்ம வயதிற்கு மேற்பட்ட பெண்ணுக்கு நடக்கும் பாலியல் பிரச்சனை கூட நம்மால் ஜீரணிக்க முடிய வில்லை...அதை விட என்ன நடக்கிறது என்று தெரியாத குழந்தைகளுக்கு பாலியல் கொடூரமாக பெனட்ரேசன் (வன்புணர்வு) செய்யபட்டு கொலை செய்ய பட்டால்...நம்மால் சும்மா இருக்க முடியுமா. 
பிசிக்கல் கேஷ்ட்ரேஷன் தான் சரியான தண்டனை. சென்ற வருடம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த புனிதா என்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்ய பட்டு கொல்ல பட்டார். அவரை கெடுத்து கொன்ற அந்த காமுகன்...ஏற்கனேவே ஒரு கற்பழிப்பு புகாரில் சிக்கி இருக்கிறான். சட்டம் மட்டும் சரியாக தண்டனை கொடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுமா? மேலும் தவறு செய்ய நினைப்பவன் கூட பயந்து தவறு செய்ய மாட்டான்.

அரபு நாடுகளில் இருக்கும் சட்டங்கள் இங்கு அமல் படுத்த பட்டால் தான் குற்றங்கள் குறையும். மேலும் நாமும் குழந்தைகள் விசயத்தில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அது தவிர வேறு எங்காவது குழந்தைகள் சித்திரவதை மற்றும் வன்கொடுமை செய்ய படுவது தெரிந்தால் பின்வரும் சைல்டு ஹெல்ப் லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தெரிய படுத்துங்கள். 1098, 022-2495 2610 & 022-2495 2611 (Head office), 044-2815 6098, 044-2815 8098 (Southern region)


6 மெழுகுவர்த்திகள் படத்தில்...ஷ்யாம் காலினை பிடிச்சு கெஞ்சும் அந்த குழந்தைகள் தான் ஞாபகத்தில் வருகிறது. பரபரப்பாக நகரில் நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தின் ஐநூறு அடி தூரத்தில் கூட ஒரு குடவுனில் குழந்தைகள் அடைக்க பட்டு சித்திரவதை செய்ய படலாம்.. அப்படி உங்கள் கண்களுக்கு தென்பட்டால்...தயவு செய்து சைல்டு ஹெல்ப் லைன் போன் செய்து சொல்லுங்கள்.

கொசுறு: பெற்றோர்களே...உங்க பெண்ணுங்கள கஜினி சூர்யா மாதிரி இருக்க சொல்லுங்க. கஜினி படத்தில் சூர்யா தன்னுடைய நிலையை (Short term memory loss) உணர்ந்து, தன்னையையும் காப்பாற்றி கொண்டு...வில்லனையும் பழி வாங்குவார். அது போல பெண்களும் சமூகத்தில் நிலவும் கொடுமைகளிலிருந்து தன்னை தானே காப்பாற்றி கொண்டு...பிறகு பள்ளி கல்லூரிக்கு போகட்டும் இல்ல வேலைக்கு போகட்டும்.

புதன், 22 ஜனவரி, 2014

நினைத்தாலே இனிக்கும் - பகுதி 4

எப்போதாவது அத்தி பூத்தாற்போல வரும் சில பாடல்கள் மனதை கொள்ளை அடித்து விடுகின்றன. அந்த வகையில் கமல் மற்றும் கமலினியின் காதல் மழையில்....வேட்டையாடு விளையாடு படத்தில் "பார்த்த முதல் நாளே" பாடல் - கணவன் மனைவி அன்பை மிக அருமையாக பாடலாசிரியர் தாமரை சொல்லி இருப்பார். இவர் பாடல் வரிகளில் ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழ் சொற்களை பயன்படுத்துவது சிறப்பு. 

இதில் வரும் "என் பதாகை தாங்கிய உன் முகம்" மற்றும் "உன் விழியில் வழியும் பிரியங்கள்" என்று அன்பின் புதிய பரிமாணங்களாக சொல்கிறார். மேலும் இந்த பாடலில் கணவன் மனைவி அன்பினை பற்றி கூறும் போது.....கணவன் மறந்த விசயங்களை மனைவி மீட்டெடுத்து வியப்பில் ஆழ்த்தி விடுவதாகவும் அதுபோல, கணவனும் மனைவியிடம் எதையும் கேட்கமால் அவளின விருப்பத்தை செய்ய முயலுவதை மிக இனிமையாக எழுதி இருப்பார். இறுதியாக கமல் விடை பெற்று செல்வது மற்றும் கதவோரம் நின்று கமலினி வழியனுப்பும் தருணம்....பாடல் கட்சிகளும் பாடல் வரிகளும் அருமையாக இருக்கும். பாடகர் : உன்னி மேனன் - பாம்பே ஜெய்ஸ்ரீ

எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீயறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்.


போகின்றேன் என நீ பல நூறு முறைகள்
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்
சரியென்று சரியென்று உனைப் போகச் சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்



பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே உணர்ந்தேன்
காட்சி பிழை போலே

ஓரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை பார்த்தே கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழையானேன்

கொசுறு: பதாகை என்றால் கொடி என்ற பொருள். அதாவது நாயகியின் கொடி போன்ற உடலினை தாங்கி நிற்கும் நாயகனின் முகம்...அந்த நினைவுகள் என்றும் மறையாது என்று பொருள். அது என்னவோ..கமல் பட நாயகிகள் (விருமாண்டி அபிராமி, வே.விளையாடு கமலினி, அன்பே சிவம் கிரண், தசாவதாரம் அசின்....மற்றும் பலர்) அடுத்து தமிழ் சினிமாவில் காணாமல் போய் விடுகின்றனர்.

சனி, 18 ஜனவரி, 2014

நையாண்டி - பகுதி 4

தமிழ் மொழியில் சங்க கால இலக்கியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள், சிற்றுலக்கியங்கள் என்று ஏக பட்ட நூல்கள் இருக்கின்றன. இவற்றுள் நமக்கு வாழ்வியல் நெறிமுறைகளை இரண்டு அடியில் தெளிவாக எடுத்துரைப்பது திருக்குறள். சமிபத்தில் நான் படித்த திருக்குறள் (குறள்: 484 - அதிகாரம்: காலம் அறிதல்) 

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்


பொருள்: உலகத்தையே வென்று கைகொள்ள வேண்டுமானால் உரிய காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து அறிந்து செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு மிக நுட்பமான விசயங்களை இரண்டே வரியில் திருவள்ளுவர் சொல்வது மிகவும் சிறப்பானது. திருக்குறளின் அருமை உணர்ந்த இடைக்காடர் "கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ - என்று புகழ்ந்து பாடினார். இதில் ஒரு படி மேல சென்று ஔவையார் "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் - என்று புகழாரம் சூட்டுகிறார்.

திருக்குறளை புகழ்ந்து சொன்னால் மட்டும் போதுமா? அதன் பெருமையை பறைசாற்ற நமது தமிழகத்தில் ஒரு தமிழ் அறிஞர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவரின் முயற்சி மிகவும் பாராட்ட தக்கது. அந்த தலைவர் சொன்ன விஷயம் "நீதிமன்றங்களில் கீதை-குரான்-பைபிள் போன்ற நூல்களுக்கு பதிலாக திருக்குறளை வைத்து சத்திய பிரமாணம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறிய இந்த நிபந்தனை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த முது வயதில் கூட தொல்காப்பியத்திற்கும் உரை எழுதுகிறார். தமிழுக்கும் தமிழருக்காக வாழும் தலைவர் அவர்.

(முன்பு சொன்னது போல நையாண்டி பதிவுகளில் புலிகேசி மன்னர் வருகை தருகிறார். அவருக்கு துணையாக அடியேன் அமைச்சராக வலம் வருகிறேன்)

புலிகேசி: அமைச்சரே...நீர் சொன்ன அந்த தலைவர் யாரென்று எனக்கு தெரியும். அவரின் பேச்சை கேட்டு தான், திரை வானில் சிறகடித்து கொண்டிருந்த நான் இப்பொழுது சிறகொடிந்த பறவையாகி விட்டேன். நீர் சொன்ன அந்த தலைவரும் திருக்குறளுக்கு தெளிவுரை எழுதியுள்ளார் தெரியுமா?  

அமைச்சர்: ஆமாம் மன்னா..அது தவிர தனது தொண்டர்களை வள்ளுவர் சொன்னது போல வாழ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

புலிகேசி: சரி அமைச்சரே. திருக்குறளுக்கு உரை எழுதியவர் அறத்து பாலில் பதினைந்தாவது அதிகாரத்தை (பிறனில் விழையாமை) மறந்து விட்டாரா?

அமைச்சர்: மன்னா...தாங்கள் சொல்வது ஒன்றும் புரிய வில்லையே..

புலிகேசி: அமைச்சரே...நீர் மணிக்கு ஒருமுறை மங்குனி அமைச்சர் என்பதை நிருபித்து கொண்டு இருக்கிறீர். நாடகம் நடிக்க வந்த அடுத்தவரின் மனைவியை தனது துணைவியாராக வைத்து கொண்ட தலைவர்....ப்படி "பிறனில் விழையாமை" (பிறரின் மனைவியை விரும்பாமை) என்ற அதிகாரத்திற்கு தெளிவுரை எழுதி இருப்பார். மேலும் வள்ளுவர் சொல்படி வாழ வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் சொல்வது சற்று நகைப்புக்குரியதாக இருக்கிறது.

அமைச்சர்: ஒருவேளை தனது அதிகாரத்தால் அவர் அந்த அதிகாரத்தையே மறந்திருக்கலாம். விடுங்கள் மன்னா...இன்று உயர் பதவியில் இருக்கும் சில அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் குறிப்பாக சில காக்கி சட்டை போட்ட மச்சான்களும், சில நடிகர்களும் "அடுத்தவர் பட்டா போட்ட இடங்களிள் தான் கொட்டா போடுகிறார்கள்".

புலிகேசி: அமைச்சரே, அந்தரங்கம்...அந்தரங்கமாக இருந்தால் பிரச்சனை இல்லை. அது அம்பல படுத்த பட்டால் தான் பிரச்சனை. ஒரு சாமியார் இன்னொரு திருமணம் முடிந்த நடிகையுடன் ரகசியமாக இருந்தது அம்பல படுத்த பட்டது. ஒரு தலைவர் அல்லது சாமியார், சாமானியராக இருந்தால் பிரச்சனை இல்லை. தவறு செய்யும் அவர்கள் ஊருக்கு உபதேசம் செய்யும் பொழுது தான் அவரின் அந்தரங்கம் மக்களால் விமர்சிக்க படுகிறது. 

அமைச்சர்: இங்கு நாட்டில் பல அந்தரங்கங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. ஒரு சில அந்தரங்க விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்து விடுகின்றது. ஆனால் பலரும் தங்களின் அந்தரங்களை மறந்து....மற்றவரின் அந்தரங்கத்தை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். மேலும் அம்பலமான சிலரின் அந்தரங்கம் பற்றி விவாதிக்கும் பல நபர்களின் (so called people) அந்தரங்கம் என்பது......யாருக்கும் தெரியாமல் அவர்கள் நிறைவேற்றி கொண்டதாக இருக்கும் அல்லது அவர்களின் நிறைவேறாத ஆசையாக இருக்கும்.

புலிகேசி: ஆமாம் அமைச்சரே...பல லகுட பாண்டியர்கள்கள் தாங்கள் செய்த தவறை மறந்து மற்றவரின் தவறுகளை விமர்சிக்கிறார்கள். தவறு செய்பவர்களுக்கு உடனே சரியான தண்டனை கிடைப்பதில்லை. மற்றவரின் உடமைகளை அபகரிப்பவர்கள் தற்பொழுது வேண்டுமானால் சந்தோசத்துடன் இருக்காலம். ஆனால் பிற்காலத்தில் மிகவும் கஷ்டபடுவார்கள் என்று அதர்வண வேதத்தில் சொல்ல பட்டிருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும் அமைச்சரே...நீங்கள் எப்படி?

அமைச்சர்: மன்னா...ஐயம் வேண்டாம். நான் ஏகபத்தின விரதன். பெண்ணை பார்த்தால் மண்ணை பார்த்து நடந்து செல்கிறேன். தாங்கள் என்னை அந்தபுரம் பக்கம் அனுமதிப்பதில்லை. அதற்கு மேல என் மனைவி, சமிபத்தில் தொலைகாட்சியில்...நீங்கள் கைபிள்ளையாக இருந்த சங்கத்தின் (வ.வா.சங்கம்) பெயரில் வெளிவந்த திரைப்படம் பொங்கலன்று ஒளிபரப்ப பட்டது. படத்தில் ஒரு பாடல் காட்சியை உன்னிப்பாக பார்த்து கொண்டிருந்தேன். அப்பொழுது எனது மனைவி "ஏங்க இங்க பாருங்க" என்று மூன்று முறை சொன்னது கவனிக்காமல பாடலில் நாயகி "பார்க்காதே பார்க்காதே...அய்யயோ பார்க்காதே" என்பதை கவனித்து கொண்டிருந்தேன். விளைவு இங்கே பாருங்கள்...முகம் கொழுக்கட்டை மாதிரி வீங்கி இருக்கிறது. வள்ளுவராவது ரெண்டு அடியில் (குறள்) சொல்லி புரிய வைப்பார்....ஆனால் மனைவியோ ஒரே அடியில் புரிய வைத்து விட்டார். இருக்கட்டும் மன்னா...உங்களின் கனவு கன்னி நயன்தாரா என்ன ஆனார்.

புலிகேசி: அமைச்சரே...நான் தலை நகரத்தில் கூறியது போல (என் அடுத்த டார்கெட் நயன்தாரா) அவரிடம் சென்று எனது விருப்பத்தை சொன்னேன். ஆனால் இந்த சிம்பு என்ற ஒரு சிறுவன் அடிக்கடி வம்பு செய்து கொண்டிருக்கிறான். சரி அடுத்து திரிஷாவை தேடி சென்றேன். அவரை இங்கு தமிழகத்தில் காணவில்லை. இப்பொழுது வெங்காயத்திற்கு இருக்கும் மார்க்கட் கூட திரிஷாவிற்கு இங்கு இல்லை. பிறகு ஒரு வழியாக அவரை ஆந்திராவில் பார்த்து விட்டு எனது விருப்பத்தை தெரிவித்தேன். ஆனால் திரிஷா என்ன பார்த்து நீ "வேணா" என்று கூறி விட்டு "ராணா" என்ற நடிகரிடம் தஞ்சம் அடைந்துள்ளார். 

அமைச்சர்: விடுங்கள் மன்னா...நீங்கள் கூறியது போல திரிஷா இல்லாவிடில் திவ்யா இருக்கிறாரே. நான் மேலே சொன்ன நமது சங்கத்தின் பெயரில் வந்த படத்தின் நாயகி பெயர் கூட திவ்யா தான் (ஸ்ரீ திவ்யா). இந்த முறை அவரின் தந்தையை அணுகி உங்களின் விருப்பத்தை கூறி சுயவரத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.

புலிகேசி: அமைச்சரே...உங்களின் எண்ணமும் செயலும் அப்படியே என்னை போலவே இருக்கிறது. ஆனால் திவ்யா-வின் தந்தை யாரென்று தெரியவில்லையே. சரி நானே திவ்யாவிடம் கேட்டு விடுகிறேன்.

ஊதா கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்
நீ சொல்லடி நான் அவனுக்கு சலாம் போடணும்.

திங்கள், 13 ஜனவரி, 2014

ஆட்டோகிராப்

இது சற்று நீளமான பதிவு....படித்த முடித்த உடன் நீங்களும் எழுத ஆரம்பித்து விடுவீர்கள்.

நம் வாழ்வில் நடக்கும் அன்றாட நிகழ்வில், நாம் அறிந்து கொண்ட விஷயம்...நாம் பார்த்து ரசித்தது...நம் மனதில் தோன்றும் சிந்தனைகள் போன்று பலவற்றை நம்முடைய மன பெட்டகத்தில் பூட்டி நியாபக படுத்தி கொள்ள முடியாது. அப்படியே நியாபக படுத்தினாலும் சில நாட்கள் கழித்து அந்த நினைவுகள் மறக்கடிக்க பட்டிருக்கும். திரும்ப மீட்டெடுப்பது கடினம். அந்த நினைவுகள்...மனதில் தோன்றும் சிந்தனைகள் மறக்காமலிருக்க குறிப்புகளாக எழுதி வைத்து கொண்டால் எப்பொழுது வேண்டுமானாலும் திருப்பி பார்க்கலாம். "எழுதாத கணக்கு அழுதாலும் தீராது" என்று கிராம புறத்தில் சொல்வார்கள். அந்த வகையில் எனது மனதில் தோன்றிய விஷயங்களை கிறுக்கல்களாக எழுதி வருகிறேன். 

எண்ணத்தில் தோன்றியதை ஏட்டில் எழுத ஆரம்பியுங்கள். எதை பற்றி எழுதுவது என்று யோசிக்க வேண்டாம். The "funny thing you write" is better than the "best thing you did not write". நமது அன்றாட வாழ்வில் நடக்கும் விசயங்களிலே நிறைய நகைசுவை இருக்கும். மற்றும் நீங்கள் ரசித்த காட்சிகள், அரசியல், ஆன்மீகம், பகுத்தறிவு, சமுக பிரச்சனைகள், மொழி, கலாச்சாரம், இயற்கை போன்றவற்றை பற்றி உங்கள் மனதில் தோன்றுவதை எழுதலாம். நீங்கள் இந்த மாதிரி எழுதும் விஷயங்கள் ஏற்கனவே விவாதிக்க பட்டது...இதில் புதுசா நாம் என்ன சொல்லிவிட போகிறோம் என்று நினைக்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் தனி தனி பெர்ஷேப்சன் (perception) இருக்கும்....நீங்களும் உங்கள் மனதில் தோன்றிய தனித்துவமான உங்களின் பார்வையை பதிவு செய்யலாம். 

பொதுவாக எழுத்துலகில் அனைவரும் தருமி தான். கடவுள் எழுதி கொடுத்த பாட்டை தான் பாடி கொண்டிருக்கின்றனர். (எழுத்தறிவித்தவன் இறைவன்). எவரும் புதியதாக பாடவில்லை. என்ன கொஞ்சம் பொருள் புரிந்து பாட வேண்டும். அரிவை கூந்தலை நாடி சென்ற அஞ்சிறை தும்பி-யிடம் (கொங்குதேர் வாழ்க்கை) சிவ பெருமான் வினவியதின் பொருள் தெரிய வேண்டும். ஏனெனில் இங்கு எழுத்துலகில் பாட்டு பாடி பேர் வாங்கிய எழுத்தாளர்களை விட...பாட்டில் குற்றம் கண்டுபிடிக்கும் புலவர்கள் (நக்கீரர்கள்) தான் அதிகம். அதலால் நீங்க சொல்ல வரும் கருத்தின் பொருளை புரிந்து எழுத வேண்டும். 

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் முன்பே எல்லா சூழ்நிலைகளுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். அந்த இலக்கினை தாண்டி யாரும் எழுதி விட முடியாது. இருந்தாலும் அதற்கடுத்து வந்த கவிஞர்கள் எல்லாம் அதே சூழல்களில் ஆனால் தங்களின் தனி பாணியில் எழுதுகின்றனர். அது போல உங்களுக்கும் சில விசயங்களில் உங்களின் "அறியும் திறன்" மற்றும் உங்களின் "சமுக பார்வை" மற்றவரிடம் இருந்து வேறு பட்டு இருக்கலாம். அதை கடை பிடித்து எழுதலாம். நீங்கள் செய்யும் செயல்களே உங்களுக்கு முகவரியாக இருக்கும்.

அடுத்து எழுதிய உடனே உங்களுக்கு சரியான அங்கீகராம் கிடைக்காது. உண்மையை எடுத்துரைத்த கலிலியோ-வை முட்டாள் என்று தான் ஆரம்பத்தில் சொன்னார்கள். ஒரு முறை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு பள்ளி விழாவிற்கு கவிதை சொற்பொழிவாற்ற சென்றிருந்தார். அப்பொழுது ஒரு மாணவன் எழுதிய கவிதையை கண்ணதாசன் வாசித்து காட்டினார். அங்கே பலத்த கரகோஷம் எழுந்தது. பிறகு தான் எழுதிய கவிதையை அதே மாணவனிடம் சொல்லி வாசிக்க சொன்னார். அந்த மாணவன் கவிஞரின் கவிதையை வாசித்த பிறகு...கேட்டு கொண்டிருந்த பார்வையாளர்கள் அமைதியாக இருந்தனர். அதன் பிறகு கவிஞர் எழுந்து உண்மையை சொன்னார்....தான் வாசித்த கவிதை மான்வனுடையது அதற்கு பாராட்டு கிடைத்தது, ஆனால் அந்த மாணவன் வாசித்த கவிதை என்னுடையது அதற்கு பாராட்டு கிடைக்க வில்லை. இங்கு எல்லோரும் யார் பேசுகிறார் என்று தான் கவனிக்கிறது அவர் என்ன பேசுகிறார் என்று கண்டு கொள்வதில்லை.


அது போல எதையும் கண்டு கொள்ளாமல் எழுதி கொண்டிருங்கள். இதையெல்லாம் தாண்டி ஒரு நாளில் நீங்கள் கவனிக்க படுவீர்கள். முதலில் நான் முக நூலில் எழுத ஆரம்பித்தேன், நாலு அஞ்சு லைக் கிடைக்கும். மற்றவர்களின் மொக்கையான ஸ்டேட்டஸ் மற்றும் ஷேரிங்-க்கு கிடைக்கும் லைக் கூட எனக்கு கிடைக்காதது கொஞ்ச பீலிங்கா இருக்கும். அதன் பிறகு நான் கூகுள் வலைதளத்தில் எழுத ஆரம்பித்து இருக்கிறேன். இன்று எனது வலைத்தளம் நமது தமிழ் மக்களால் உலகின் பல நாடுகளிலிருந்து பார்வையிட பட்டுள்ளது என நினைக்கும் போது சற்று மகிழ்ச்சியாக இருக்கிறது (As per Blogger audience views)

முக நூலில் உங்களுக்கு நூற்று கணக்கான நண்பர்கள் இருப்பார்கள்..அவர்கள் போடும் ஸ்டேட்டஸ் மற்றும் ஷேரிங், பிறகு நீங்கள் லைக் செய்திருந்த பக்கங்களில் இருந்து வரும் தகவல்கள், நீங்கள் ஃபாலோ பண்ணும் நபர்களின் செய்திகள், ஃபேவரைட் பேஜஸ் மற்றும் நீங்கள் சேர்ந்துள்ள குருப் மெசேஜ்-கள் என்று ஒரு மணி நேரத்துக்குள் பத்திற்கும் மேற்பட்ட போஸ்ட் பார்க்க வேண்டியது இருக்கும். நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து தடவையாது பேஸ் புக் வந்தால் தான் எல்லா போஸ்டும் படிக்க முடியும், இல்லையெனில் நீங்கள் பார்க்க வேண்டியவை சுருக்க பட்டு விடுகிறது. பேஸ் புக் நிறுவனம் நடத்திய ஆய்வில்...60% நபர்கள் சாட்டிங் செய்ய தான் வருகிறார்கள். எனவே இந்த முக நூல் தளத்தில் நீங்கள் பொறுமையாக எந்த செய்தியையும் படிக்க இயலாது. மேலும் எந்த நேரத்திலும் உங்கள் முக நூல் கணக்கு முடக்க படலாம் அல்லது முக நூலே முடங்கி விடலாம் (சில நாடுகளில் தடை விதிக்க பட்டுள்ளது). அதற்கு பதிலாக உங்களுக்கு எழுதுவதில் ஆர்வமிருந்தால்...கூகுள் வலைத்தளம் ஆரம்பித்து எழுதலாம். இங்கு வந்து நீங்கள் படிப்பது ஒரு நூலகத்தில் படிப்பது போன்ற உணர்வை தரும்.

நீங்கள் எழுதுவதாக இருந்தால் தமிழ் மொழியிலே எழுத ஆரம்பியுங்கள். ஏனெனில் பயன் பாட்டில் இல்லாத ஹீப்ரு, பாரசீக மொழிகள் போன்று இன்று உள்ள ஆங்கில மோகத்தால் தமிழ் மொழியும் தொலைந்து விடலாம். இப்பொழுது எல்லா தகவல் பரிமாற்றங்கள் இணையத்தின் வழி நடகின்றது மற்றும் உலக மக்கள் அனைனவரும் இணையத்தினை பயன்படுத்துகின்றனர். ஆதலால், நமது மொழி அழிந்து விடாமல் வளர்க்க இணையத்தினை பயன் படுத்தலாம். (இந்திய பிராந்திய மொழிகளில் இணையத்தில் அதிகமாக தமிழ் பயன்படுத்த படுகிறது). அதற்காக ஆங்கிலம் தேவையில்லை என்று சொல்ல வரவில்லை. நமக்கு தேவையான் இடங்களில் வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பிற்கு ஆங்கிலம் பயன்படுத்துங்கள்.

நான் "மறதி" என்ற தலைப்பில் முதல் பதிவினை முக நூலில் சற்று வேடிக்கையாக எழுதினேன். பிறகு என்னவென்று தெரியவில்லை...எழுதுவதில் ஒரு ஆர்வம் ஏற்பட்டு எழுதி கொண்டு இருக்கிறேன். ஒரு செயலை ஆரம்பிப்பது பெரிய விஷயம் இல்லை...அந்த செயலுக்கு முற்று புள்ளி வைக்காமல் தொடர்ந்து செய்வது சற்று கடினமான விஷயம். பொதுவாக வர்த்தகத்தில் டிசம்பர் மாதம் ஆப் சீசனாக இருக்கும்...அலுவலகத்தில் ஓய்வு கிடைக்கும் (அன் தே நெட்...ஆப் தே வொர்க்) இணையத்தில் கொஞ்ச பதிவுகள் எழுதினேன். தற்போது ஜனவரி பிறந்து விட்டதால் வேலை கொஞ்சம் பிஸியாகி விடும். நிலைமை வைஸ் வெர்சா தான் (ஆப் தே நெட்...அன் தே வொர்க்). இருந்தாலும் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எழுதி கொண்டிருக்கிறேன். அரசியல் சமுக பிரச்சனை பற்றி எழுதினால்....ரெம்ப போர் அடித்து விடும். அதனால் நினைத்தாலே இனிக்கும் மற்றும் நையாண்டி என்று சில பதிவுகளை தொடர்களாக எழுதி வருகிறேன். 

மேலும் தங்கலிஸ் என்ற தலைப்பில் தமிழ் வழியாக ஆங்கிலம் தெரிந்து கொள்வது பற்றி எழுதலாம் என்று ஒரு ஆவல். நான் ஆங்கிலத்தில் கொஞ்ச அரை குறை தான். ஒரு முறை நான் பணி புரியும் நிறுவனத்தில் சேர்ந்த பொழுது என்னுடைய இயக்குனரிடம்....ஏற்றுமதி செய்த ரிப்போட்டை காண்பித்து நின்று கொண்டிருந்தேன். அந்த ரிப்போட்டில் தவறு இருப்பதை கண்டுபிடித்து.....ஷிட் (shit) என்று ஆங்கிலத்தில் கூற உடனே நான், சிட் (sit) என்று சொல்லி நம்மை உக்கார தான் சொல்கிறார் என்று அவர் முன்னே உக்கார்ந்து விட்டேன். பிறகு கோபமா பார்த்து முறைச்சுட்டாறு. இப்படி இங்கிலீஷ் புரியாமல் நிறைய இடத்தில பல்பு வாங்கி இருக்கேன். பத்தாம் கிளாஸ் படிக்கும் போது....ஜாக்டவ் (திருட்டு காகம்) என்ற எஸ்ஸே மற்றும் லோட்டஸ் என்ற மெமோரி போயம் மட்டும் தெரிஞ்சு வசுகிட்டு இங்கிலீஷ்-ல பாஸ் பண்ணியாச்சு. பிறகு பாலிடெக்னிக் படிச்சு வேலைக்கு வந்த இடத்துல தான் மத்தவங்க பேசுறது வச்சு...கொஞ்ச கொஞ்சமாக தெரிஞ்சுகிட்டேன். இன்னும் சரியா பிரிப்போசிஷன் (இன், அட், பை) பயன் படுத்துறதுன்னு தெரியாது. பொதுவா நமது நண்பர்களுக்கு ஆங்கிலம் சொல்லி தர வேண்டியதில்லை என்றாலும்...என்னைய மாதிரி இருக்கும் பசங்களுக்கு கொஞ்ச சொல்லி தரலாம் என்ற சிறு முயற்சி...நானும் கற்று கொண்டு எழுதிகிறேன். (என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயம் - பிற்குறிப்பு கொசுறு II படிக்கவும்)

இன்னொரு விஷயம், பொதுவா இப்படி சமூக வலைதளங்களில் எழுதுறவங்களை....வேலையில்லாத ஆளுங்க என்று சில பேர் நினைப்பதுண்டு. ஆனால் உண்மை என்னவென்றால், எனக்கு தெரிஞ்சு எழுதுறவங்க அனைவரும் பிஸியான பெர்சன்ஸ் தான். கொஞ்ச பேஸ் புக், டிவிட்டர் பக்கம் தேடி பாருங்க....நம்ம மோடி, கேஜ்ரிவால், அருண் ஜெட்லி போன்ற அரசியல் வாதிகளும், கலை, மருத்துவ துறை மற்றும் உயர் அரசாங்க பதவியில் இருப்பவர்கள் பல பேர் எழுதி கொண்டு தான் இருக்கின்றனர். அட..நம்ம கலைஞரை கூட பாருங்க, ஆளு வச்சு கூட டெய்லி பேஸ் புக்-ல ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றாரு. (காங்கிரஸ் கூட்டனியிலிருந்து வெளியேறிய தி.மு.க-வை பார்த்து EVKS இளங்கோவன் சொன்னாரு...."காங்கிரசை பிடித்த சனி வெளியேறி விட்டது" என்று, அதற்கு முரசொலியில் கலைஞர் எழுதினாராம் "என்னது...காங்கிரசை விட்டு இளங்கோவன் வெளியேறி விட்டாரா என்று). இவ்வாறு எல்லா பிரபலங்களும் எழுதி கொண்டு தான் இருக்கின்றனர். 

எனவே...நீங்களும் கொஞ்ச நேரம் கிடைக்கும் போது எழுத ஆரம்பிங்க...வாழ்த்துக்கள். 

பதிவின் நீளம் அதிகமாகிடுச்சு...மன்னிக்கவும் இத்துடன் முடித்து கொள்கிறேன்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்.

எஸ். ரெங்க ராஜன். 

கொசுறு I: திருவிளையாடல் பாடலில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாக மணமிருக்கிறதா இல்லையா என்பதற்கு மேலே சொன்ன கொங்குதேர் வாழ்க்கை பாடலை சிவ பெருமான் எழுதி தருமிடம் தருவார். அந்த பாடலில்...பெண்களின் கூந்தலை பற்றி குறிப்பிடும் போது "அரிவை கூந்தல்" என்று சொல்லிருப்பார். "அரிவை" என்பது...பெண்ணின் ஐந்தாவது பருவம் (பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்)...ஆகவே "அரிவை" பருவம் என்றால்..நாற்பது வயது பெண்ணை குறிக்கும் என நினைக்கிறேன். அப்படியென்றால்...அதற்கு முந்தைய பருவ பொண்ணுங்க கூந்தலுக்கு மனமில்லை என்று தானே பொருள் படுகிறது. அது எனக்கு சரியா தெரியல.....பொதுவா பொண்ணுங்க கூந்தலில் மணமிருக்கா இல்ல ஈறு பேணு இருக்கானு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும்...ஆண் என்றாலும் சரி....பெண் என்றாலும் சரி, ஒருவரின் உண்மையான உச்சகட்ட அழகு வெளிபடுவது நாற்பது வயதில் தான். நம்ம நடிகர் விஜயை பாருங்கள் தெரியும். அப்ப இருக்கும் நாளைய தீர்ப்பு படத்தில் பார்ப்பதற்கும்...இப்ப இருக்கும் படத்தில் வருவதற்கும். விஜய் மட்டுமல்ல...அஜித், கமல், அர்ஜுன போன்ற நடிகரும் நாற்பது வயதில் தான் வசீகரமாக தெரிவார். உங்க அம்மா அப்பா கல்யாண போட்டவையும்...அடுத்து நாற்பது வயசு போட்டவையும் பாருங்க தெரியும். ஏனெனில் அந்த பருவம் தான்..ஓடி ஓடி உழைத்து, பிரச்சனைகளை எதிர் கொண்டு, பல அனுபவங்களை பெற்று முதிர்ச்சி அடைந்த பருவம். அதற்கடுத்து ஒய்வு வந்து விட்டால்..பழைய முக பொலிவு போய் விடும். உழைத்து கொண்டே இருங்கள்...அழகாக தெரிவீர்கள்

கொசுறு II: இந்த ஆங்கிலத்தில் அடிப்படையா "ஆர்ட்டிகிள்" என்ற பயிற்சி இருக்கும். அதாவது....ஆங்கில வவ்வல்ஸ் (ஆங்கில உயிரெழுத்து - a, e, i, o, u) முன்னே "an" போட வேண்டும். இதன் படி...Unmberla & University - இரண்டுமே "U" ல ஆரம்பிக்கும் சொற்கள். ஆனால் Umberla என்ற சொல்லுக்கு "an" போடுகிறோம் ஆனால் University என்று சொல்லுக்கு "a" போடுகிறோம். அது போல முரணாக...hour என்று "h" ல ஆரம்பிக்கும் சொல்லுக்கு "an" போடுகிறோம்.....இதற்கு காரணம் என்ன வென்று தெர்யுமா....எல்லாம் தமிழ் மொழி தான் காரணம். தமிழ் உயிரெழுத்து ("அ" முதல் "ஔ" வரை) ஓசையை கொண்டு ஒலிக்கும் ஆங்கில சொல்லுக்கு "an" போட வேண்டும். உதாரனமாக ""லிபென்ட் (elephant) என்ற சொல்லுக்கு "an" போடணும். மறுபடியும் மேலே சொன்ன சொற்களை  பாருங்கள்....""ம்பர்லா ("அ" உயிரெழுத்து an போடுகிறோம்), "யுனிவர்சிட்டி" (யு - உயிர் மெய் எழுத்து - an போடவில்லை, a போடுகிறோம்), இதே போல....Hour என்ற சொல்லில் ""வர் ("அ" உயிரெழுத்து an போடுகிறோம்). தெரிஞ்சுகோங்க இங்கிலீஸ் காரனே நம்ம மொழிய பயன்படுத்தி தான் டெவலப் பண்றான். இனிமேலாட்சும் ட்யுட், வன்னா, கொன்னா, வாட்ஸ் அப், ஆசாம் என்று பீட்டர் விடாதீங்க

சனி, 11 ஜனவரி, 2014

நினைத்தாலே இனிக்கும் (பகுதி 3)


இன்று வைகுண்ட ஏகாதசி திருநாள். பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு பெருமாளுக்கு உகந்த நாளான சனி கிழமை அன்று வந்துள்ளது. வைணவ தலங்களில் முதன்மையாக கருதப்படும் ஸ்ரீ ரங்கத்தில் மிக சிறப்பாக வழி பாடு செய்ய படும். பல வைணவ தலங்கள் இருந்தாலும், பலரும் ஸ்ரீ ரங்கத்திற்கு சென்று அரங்கனை வழி படுவதை பெருமையாக நினைக்கின்றனர். "வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி" என்று கவிஞர் வாலி மகாநதி படத்தில் சொல்லி இருப்பார். அந்த திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரெங்கனை பற்றி அமர கவிஞர் ரெங்க ராஜன் (வாலி) எழுதிய பாடல் வரிகளை அடியேன் இந்த ரெங்க ராஜன் இங்கே சமர்பிக்கிறேன்.

படம்: மகாநதி
பாடல் : ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாடியவர்: எஸ்.பி.பி & உமா ரமணன்
இசை : இளையராஜா

(கங்கா சங்காச காவேரி ஸ்ரீரங்கேச மனோஹரி
கல்யாணகாரி கலுசானி நமஸ்தேஸ்து சுகாசரி)


ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம் பாடடி

கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்
அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்

(ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி)

கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறு வீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கள நீராட முன் வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் தேவ லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி


(ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி)

வெள்ளி, 10 ஜனவரி, 2014

அம்புலி (அம்பு + புலி )


வில்லின் இருபுறமும் கட்ட பட்ட நாணில் அம்பினை ஏற்றி...பின்னோக்கி இழுக்கும் பொழுது அம்பு முன்னோக்கி சென்று இலக்கை அடைகிறது. சாதாரண நிலையில் பின்னோக்கி இழுக்காமல் அம்பினை எய்ய முடியாது. அம்பினை பின்னால் இழுத்தால் தான் அது முன்னோக்கி செல்லும். அது போல தான் வாழ்வில் சில அவமானங்கள் மற்றும் தோல்விகளால் நம்மை பின்னோக்கி இழுத்து செல்கின்றன. நீங்கள் பின்னோக்கி செல்வதால் துவண்டு விடாதீர்கள்.....அந்த "இக்கட்டான தருணங்கள்" தான் உங்களை அம்பினை போல முன்னோக்கி செல்வதற்கான உந்து சக்தியை தருகிறது.

இந்த சூழ்நிலையை தெளிவாக எடுத்துரைக்க சில திரை படங்களை நியாபக படுத்தலாம். தன் வீடு வாசல் எல்லாவற்றையும் இழந்து...நண்பனால் அவமான பட்ட அண்ணாமலையும், குடும்பத்தினர் செய்த துரோகத்தினால்...வீட்டை விட்டு வெளியேறும் படையப்பனும், அதிகார பலத்தால் தனது முயற்சிகளில் தோற்கடிக்க பட்டு கையில் ஒரு ரூபாயுடன் தெருவில் நிற்கும் சிவாஜியும்....இறுதியில் எல்லா சவால்களிலும் ஜெயித்து, முன்னேற்றம் அடைந்து வெற்றி கொடி கட்டுவதாக படத்தில் இருக்கும்.

இவை எல்லாம் சினிமா தான் ஆனால் நடை முறையில் சாத்தியமென்பது சற்று கடினமான விஷயம். இருந்தாலும் நாம் தெரிந்து கொள்ளும் விஷயம் என்னவென்றால்...வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து பின்னுக்கு தள்ளப்பட்ட நாயகன், சோர்ந்து விடாமல் தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியுடன் முன்னேறி சென்று தனது லட்சியத்தை அடைகிறான். நாயகன் வெற்றி பெருவதற்கான உத்வேகத்தை கொடுத்தது....அவரை பின்னுக்கு தள்ளிய தோல்விகளும் அவமானங்களும். அதாவது சுருக்கமாக சொல்வேதேன்றல் அவமானங்கள் இல்லாமல் வெகுமானங்கள் இல்லை, தோல்விகள் இல்லாமல் சரித்திரங்கள் இல்லை.

இந்த அம்பினை போல புலியும் பின்னால் பதுங்குவது பாய்வதற்கு தான். அதே போல பல பிரச்சனைகளால் வீழ்ந்து விடும் போது....மனதில் வையுங்கள் இந்த வீழ்ச்சி என்பது ஒரு நல்ல எழுச்சி பெறுவதற்கான சந்தர்ப்பம் என்று. சில சோதனைகள் தான்....சாதனையின் பிறப்பிடங்களாக அமைகிறது.

கொசுறு: இந்த "அம்புலி" பதிவினை எழுதும் போது...இந்த வில்-அம்பு மற்றும் புலிக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக தோன்றியது. ஆமாம் இந்த இரண்டும் வெற்றி முரசு கொட்டிய நமது சேர சோழ மன்னர்களின் கொடியில் இடம் பெற்றுள்ள சின்னங்கள். வெற்றிக்கு வித்திட்ட அடையாளங்கள்.


- ரெங்க ராஜன்

வியாழன், 9 ஜனவரி, 2014

நையாண்டி - பகுதி 3

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருசமும் புது முக நாயகிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். ஆனால் ஒரு சில நாயகிகள் தான் வெற்றி மகுடம் சூட்டுகின்றனர். அதன்படி வெற்றி பெற்ற நடிகைகளில் ஒருவர் தான் கும்கி படத்தில் அறிமுகம் செய்ய பட்ட லட்சுமி மேனன் (அது என்னானு தெரியல, கேரள நடிகைள் மட்டும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வருகின்றனர்). கும்கி படத்தில் நடிக்கும் போது பத்தாம் வகுப்பு தான் படித்து கொண்டிருந்தார். பரீட்சை எழுதாமல் பெயிலாகி விட்டார். பிறகு நன்றாக படித்து பத்தாம் கிளாஸ் பாஸ் ஆனார். என்ன தான் துளசி (ராதாவின் மகள்) பத்தாம் கிளாஸ்ல 480 மார்க் மேல எடுத்தாலும், அவர் நடிச்ச கடல் படம் சரியா ஓடல. ஆனா பத்தாம் கிளாஸ்ல பெயிலான லட்சுமி நடித்த கும்கி சூப்பர் ஹிட் ஆனது (நல்ல படிச்சா படம் ஓடாது...நல்ல நடிச்சா தான் ஓடும்)

இங்கே சில நகரத்து இளைஞர்கள் "சமந்தா"-வை பார்த்து நல்லா "சமத்தா" இருப்பதாகவும்....."நஸ்ரியா"-வை பார்த்து சும்மா "நச்சுனு இருக்காயா" என்று சொன்னாலும், ஆல் ஓவர் எல்லாருடைய கண்களுக்கு மிகவும் "லட்ச"ணமாக இருப்பது நம்ம "லட்சு" தான். நாலு படம் நடிச்சும் அடுத்து ரெம்ப கவர்ச்சியா நடிக்காமா...சேலை தாவணி காஷ்ட்யுமோட நடிக்கிறது தனி சிறப்பு. தமிழ் நாட்டில் பெரும்பாலான இளைஞர்களின் (இன்குலுட் மீ) இதயத்தில் இடம் பிடித்த நடிகை லட்சுமி மேனன் தான். (
அக்டோபஸ் மாதிரி எங்களுக்கு மூணு இதயம்....அதுல ஒன்னு லட்சுக்கு தான்  )


"கொசு"று : ஸ்ஸ்...யப்பா மழை காலத்துல இந்த கொசு தொல்லை தாங்க முடிய வில்லை.....இரவு நிம்மதியாக தூங்க முடியல. நேத்து நைட் தூங்கும் போது கடிச்சுகிட்டு இருந்த கொசுவை அடிக்க போனேன்....எஸ்கேப் ஆகி, காதுகிட்ட போயி கொய்ய்-னு சத்தம் கொடுத்துச்சு (என்ன சொல்லுதுன்னு ட்ரன்ஸ்லேட் பண்ணி பாத்தா.....எந்த விசயத்தையும் பிளான் பண்ணி செய்யணும் ஒகே...னு சொல்லுது). ம்ம் இப்பெல்லாம் பாதி பேரு தூக்கத்தை கெடுக்கிறது "லட்சுவும்...கொசுவும்" தான் 

ரவுசு: சில பத்திரிக்கைககளில் வரும் கற்பனை பாத்திரங்களான குருவியார், கழுகார், வம்பானந்தா, டவுட் தனபாலு போல....இனி வரும் நையாண்டி பதிவுகளில் புலிகேசி மன்னரின் (நக்கல் மன்னன் 43ம் புலிகேசி) ரவுசு இடம்பெறும். அடியேன் மன்னருக்கு துணையாக அமைச்சராக வலம் வருகிறேன் 

அண்மை செய்தி : மன்னர் கொசுக்களை ஒழிக்க, கொசு மருந்துடன் பால்டாயினை கலந்து ஊர் முழுவதும் அடிக்க சொல்லி இருக்கிறார். மேலும் பாண்டிய நாட்டு இளவரசர் விஷாலுடன் ஆடிய லட்சுவை.......தன்னுடன் சேர்ந்து ஆடுவதற்கு அழைப்பு விடுத்துருக்கிறார். ஃபை ஃபை...கலாச்சி ஃபை

புதன், 8 ஜனவரி, 2014

நினைத்தாலே இனிக்கும் (பகுதி 2)



உலகை ரசிக்க தெரிந்து கொண்டால், பார்ப்பவை எல்லாமே அழகு தான். மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு.....அலை மீண்டும் போனாலும் கரை கொண்ட நுரை அழகு

படம்: புதிய முகம், 
வரிகள்: வைர முத்து 
இசை: AR ரஹ்மான் 
பாடியவர்: உன்னி மேனன் & சுசீலா

இளமைக்கு நடை அழகு
முதுமைக்கு நரை அழகு


கள்வர்க்கு இரவு அழகு
காதலர்க்கு நிலவு அழகு


நிலவுக்கு கறை அழகு
பறவைக்கு சிறகு அழகு


அவ்வைக்கு கூன் அழகு
அன்னைக்கு சேய் அழகு


ஊருக்கு ஆறு அழகு
ஊர்வலத்தில் தேர் அழகு


தமிழுக்கு "ழ" அழகு
தலைவிக்கு நான் அழகு


(கண்ணுக்கு மை அழகு..)

செவ்வாய், 7 ஜனவரி, 2014

ரசிகன்

முன்பு அஜித் மற்றும் விஜயின் படங்களின் வெளியீடு சமயத்தில் இரு ரசிகர்களுக்கும் மோதல் பயங்கரமாக இருக்கும். தலயா இல்லை தளபதியா என்ற போட்டியில் அடி தடி சண்டை..வெட்டு குத்து என்று ரணகளமாக இருக்கும். ஒரு சமயம், அஜித்தின் வில்லன் மற்றும்விஜயின் பகவதி படங்கள் ஒரே சமயத்தில் வெளியிடும் போது, விஜயின் ரசிகர்கள் அடித்த போஸ்டர் "பகவதியே வருக...எதிர்க்க வரும் வில்லனை வெல்க". இதை பார்த்த அஜித் ரசிகர்கள் போஸ்டரை கிழிச்சு... இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, இறுதியில் ஒரு அப்பாவி ரசிகனின் மரணத்தில் முடிந்தது. இந்த ரசிகர்களின் மோதல் ஒன்றும் புதிதல்ல....ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் கூட வெறித்தனமாக சண்டை போட்டது ஒரு காலம்.

ஆனால், சம்பந்த பட்ட நடிகர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். ஆரம்ப கால கட்டத்தில் நடிகர்களிடம் சில மோதல்கள் இருந்தன. ரஜினி மற்றும் கமல் போன்ற சீனியர் நடிகர்களிடம் அந்த மோதல் வெளிப்பட்டதில்லை. ஆனால், அஜித் மற்றும் விஜயின் ஆரம்ப கால படங்களில் இந்த மோதல்களை பார்க்கலாம். விஜய் ஒரு படத்தில் "ஆணவம் என்பது செருப்பு மாதிரி அதை காலுக்கு கீழே போடணும், தலைக்கு மேலே வச்சி ஆட்டம் போட கூடாது" என்று கூறி இருப்பார் மற்றும் சில படங்களில் வெளிப்படையாக விமர்சனம் செய்திருப்பார் ("அது" இதுனா எதுடா). இறுதியாக அஜித், அட்டகாசம் படத்தில் ஒரு பாடலில் (உனக்கென்ன), எனக்கொரு நண்பன் அமைவதற்கு தனிப்பட்ட தகுதி தேவை இல்லை...எனக்கொரு எதிரியா இருப்பதற்கு உனக்கொரு தகுதி ஏதுமில்லை என்று சொல்லி Game Over என்று சிக்னல் காட்டி முடித்திருப்பார்.

அதற்கு பிறகு, இருவரும் பொறுப்பான தகப்பன் ஆன பிறகு, அந்த மோதல் போக்கை கைவிட்டு நண்பர்களாக இருக்கின்றனர். இப்பொழுது விஜய் மற்றும் அஜித் பொது நிகழ்ச்சியில் நட்பு பரஸ்பரத்துடன் இருக்கின்றனர். சமிபத்தில் மங்கத்தா மற்றும் வேலாயுதம் படபிடிப்பு ஒரே இடத்தில் நடை பெரும் சமயத்தில்...அஜித், வேலாயுதம் பட செட்டிற்கு சென்று, விஜய் உட்பட அந்த யூனிட்டில் இருப்பவர் அனைவருக்கும் பிரியாணி செய்து அவரே பரிமாறி இருக்கிறார். அதற்கு பதிலாக விஜய், பிரியாணி பரிமாறிய அஜித்திற்கு "வாட்ச்" அன்பளிப்பாக கொடுத்தார்.  விஜய் கொடுத்த வாட்சை அஜித் கழட்டாமல் நட்பின் அடையாளமாக வைத்திருக்கிறார்.
மேலும் இருவரின் மனைவிகளும் எந்த ஈகோ இல்லாமல் நட்புடன் பழகுகின்றனர். ஆனால் இங்கு இருவரின் ரசிகர்கள் மட்டும் முட்டி மோதி கொள்(ல்)கின்றனர். வரும் பொங்கலுக்கு அஜித்தின் வீரம் மற்றும் விஜயின் ஜில்லா படங்கள் வருகின்றனர். இப்போதே இருவரின் ரசிகர்கள் போட்டி போட்டு மல்லுக்கு நிற்கின்றனர்.

"பொங்கலுக்கு கல்லா கட்டுவது எங்க தளபதியின் ஜில்லா தான்" என்று விஜய் ரசிகனும்,
"எந்த ஜில்லாவிலும் எங்க தல தான்டா பில்லா" என்று அஜித் ரசிகனும் 


அடித்து கொண்டு சண்டை போட்டு கொண்டிருக்க......இங்கே தலயும் தளபதியும், ஷாலினியும் சங்கீதாவும் நண்பர்களாக இருக்கின்றனர்....சற்று தூரத்தில் அண்ணன் சஞ்சய், மற்றும் தங்கை திவ்யா உடன் சிறுமி அனோஸ்கா விளையாடி கொண்டிருக்கிறாள். தம்பதிகள் இருவரும் ரசித்து கொண்டிருக்கின்றனர்.

கொசுறு: விஜயின் மகன் பெயர் சஞ்சய் மற்றும் மகள் பெயர் திவ்யா. அஜித்தின் ஒரே மகளின் பெயர் அனோஸ்கா.

சனி, 4 ஜனவரி, 2014

நினைத்தாலே இனிக்கும் (பகுதி 1)


== ஆகாயம் மண்ணிலா ==

முன்பு சனிகிழமை சாயுங்காலம் மதுரையிலிருந்து ஊருக்கு செல்ல பழங்காநத்தம் பேருந்து நிலையம் வர வேண்டும். மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க பட்ட பிறகும், சில நாட்கள் பழங்காநத்தம் பேருந்து நிலையம் பயன்பாட்டில் இருந்தது. அப்பொழுது மாலை ஆறு மணிக்கு பழங்காநத்தம் வந்து ராஜாபாளையம் வரை செல்லும் "ஜெயவிலாஸ்" என்ற தனியார் பேருந்தில் எப்படியாவது ஏறி விடுவேன் (உக்கார சீட் இல்லாட்டினாலும்). இடையே எந்த தடங்கல் இருந்தாலும் மிகவும் சரியாக 1:30 மணி நேரத்துக்குள் ராஜாபாளையம் வந்து விடும். அந்த வண்டி டிரைவரகளுக்கு ரோடு எல்லாம் அத்து பிடி. ஒரு முறை அந்த பேருந்தில் பயணம் செய்யும் போது, திருமங்கலம் கழித்து, ஆலம்பட்டி தரைப்பாலம் (அத்வானியை கொல்ல பைப் வெடிகள் வைக்க பட்ட இடம்) மழை தண்ணீர் தேங்கி முட்டு அளவிற்கு இருந்தது, இரண்டு புறமும் எல்லா பேருந்துகளும் பாலத்திற்கு முன்னே இருந்தது. அப்பொழுது வந்த நம்ம பேருந்து பேருந்து டிரைவர் மட்டும் சாமர்த்தியமாக/துணிச்சலாக பாலத்தை கடந்து வந்தார்.

மேலும் இந்த ஜெயவிலாஸ் பேருந்தில் பயணிப்பதற்கு முக்கிய காரணம்...இளையராஜாவின் பாடல்களை கேட்டு கொண்டே பயணிக்கலாம். அந்த டிரைவர் சிட்டி லிமிட் திருப்பரகுன்றம் தாண்டிய பிறகு, பாடல்களை போட ஆரம்பித்து விடுவார். ராஜாவின் பாடல்கள் கேக்க ஆரம்பித்த உடன் தரை வழி பயணம்.....வான் வழி பயணமாகிவிடும் 

நன்றாக தெரியும், பேருந்தில் ஒலிபரப்பப்படும் முதல் பாடல் மௌனம் சம்மதம் படத்திலிருந்து "கல்யாண தேனிலா" என்ற பாடல். பிறகு புது புது அர்த்தங்கள் படத்திலிருந்து "கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே", அப்படியே மௌன ராகம், இதய கோவில், கேளடி கண்மணி, வருஷம் 16 படங்களிலிருந்து பாடல்கள் செவிக்கு விருந்தாகும். "ராஜா"பாளையம் வரை ராஜாவின் இசையில் நனைந்து கொண்டே போகலாம். பிறகு வேறு பேருந்து மாறி எங்க ஊருக்கு செல்ல வேண்டும்.

பேருந்தில் ஒலிபரப்பப்பட்ட அந்த முதல் பாடல்.....ராஜாவின் இசையில் ஜேசுதாஸ் மற்றும் சித்ரா குரலில். மொட்டை மாடி இரவில் காய்ச்சாத பால் நிலவை பார்த்து கொண்டே இந்த பாடலை கேட்டு பாருங்கள். நீதானே வான் நிலா, என்னோடு வா நிலா. லா..லா என்று முடியும் பாடல் வரிகள்

உன் தேகம் தேக்கிலா, தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா, நான் கைதி கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா, நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் எண்ணிலா, உன் பார்வை தண்ணிலா
தேனூறும் வேர் பலா, உன் சொல்லிலா ஆ ஆ

கல்யாணத் தேனிலா, காய்ச்சாத பால்நிலா
நீதானே வான் நிலா, என்னோடு வா நிலா


தேயாத வெண்ணிலா, உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா...

புதன், 1 ஜனவரி, 2014

ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்

பேனா என் வாழ்வில் முன்னேற்றத்திற்கு வித்திட்ட ஒரு உபகரணம். ஆனால் பேனாவின் பயன்பாடு தற்பொழுது குறைந்து கொண்டே வருகிறது.

பேனாவை வைத்து ஒரு ரெண்டு வரிகள் எழுதி பல நாட்கள் ஆகிறது. முன்பெல்லாம் பரீட்சை எழுதுவதற்கு, விடுதியிலிருந்து வீட்டிற்கு கடிதம் எழுதிய போதும், பதின்ம வயதில் காதல் கடிதம் வரைந்த போதும், ஓவியம் தீட்டவும், கவிதை எழுதவும், பல சரக்கு சாமான் (உ.பருப்பு, ந.எண்ணெய்) எழுதுவும், வாரமலர் குறுக்கெழுத்து கட்டங்கள் நிரப்பியதும்.....இப்படி எண்ணற்ற செயல்கள் பேனாவினால் தான் முடிந்தது.

பள்ளி பருவத்திலிருந்து கல்லூரி பருவம் வரை, பேனா எனது நண்பனாக இருந்தது. மை பேனா, பந்து முனை (பால் பாயிண்ட்) பேனா, ஹீரோ பேனா, ஸ்கெட்ச் பேனா, ஜெல் பேனா என்று பல கால கட்டத்தில் பயன்படுத்தி வந்தேன். அதுவும் பரீட்சை எழுதும் போது சொல்லவா வேண்டும், இரண்டு பேனாக்களில் மையினை நிரப்பி கொண்டு செல்வேன். பதில் தெரிந்த கேள்விகளுக்கு ஒரு பக்கமும், பதில் தெரியாத கேள்விகளுக்கு கற்பனை குதிரையை தட்டி விட்டு நான்கு பக்கங்களும் எழுதி விடுவேன். அலைகள் ஓய்வதில்லை படத்தில் "ஆயிரம் தாமரை" பாடலில் வரைமுத்து "இது தீயின் ஊற்று...இங்கு தேனை ஊற்று", என்று சொன்னது போல பேனா என்பது "கற்பனையின் ஊற்று...இதில் மையினை ஊற்று" என்று பேனாவை பயன்படுத்தினேன் 

நாகரீக வளர்ச்சி மற்றும் அறிவியலின் தாக்கத்தாலும், சில பொருட்களின் மவுசு குறைந்து கொண்டு வருகிறது. தந்தி சேவை நிறுத்த பட்டது போல, இந்த டிஜிட்டல் யுகத்தில் பேனாவின் பயன்பாடும் கொஞ்ச நாளில் மறைந்து விடும் போல இருக்கிறது. மின்னஞ்சல் மற்றும் அலை பேசி வந்த வந்த பிறகு, யாரும் பேனா மூலம் கடிதம் எழுதி தகவல் பரிமாற்றம் செய்வதில்லை. இதில் இன்னொரு கொடுமை விலாசத்தை கூட கடித உறையின் (என்வலப்) மேல எழுதாமல், பிரிண்டரில் அச்சடித்து ஒட்டுகின்றனர். வளர்ந்து வரும் நிறுவனங்களில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு பணிக்கு செல்வதற்கு பதிலாக, பிங்கர் பிரிண்ட் சிஸ்டமில் விரல் ரேகையை வைத்து விடுகின்றனர். கடிதம் மற்றும் விலைபட்டியல் கீழே கையெழுத்து போடுவதற்குக் பதிலாக டிஜிட்டல் சிக்னேச்சர் என்று கையெழுத்தை ஸ்கேன் செய்து, அச்சடிக்கும் போது இணைத்து விடுகின்றனர். நான் பேனாவை பேருக்கு மட்டும் தான் வைத்துள்ளேன்.

நேரு அவர்கள் சிறையில் இருக்கும் போது கடிதம் மூலமாக இந்திரா காந்தி அவர்களுக்கு சுதந்திர வேட்கையை வளர்த்து விட்டவர். கத்தி முனையை விட பேனா முனை வலிமையானது. ஆனால் பேனா தற்பொழுது அதன் வலிமையை இழந்து வருகிறது.

முன்பு விரல்களில் பேனாவை வைத்திருந்த காலம் சென்று, இப்பொழுது விரல்களே பேனாவாக மாறிவிட்டது (டச் ஸ்க்ரீன்). மிஸ் யூ மை டியர் பேனா....

தொலைந்து விட்டது என் பேனா - இல்லை
தொலைத்து விட்டேன் என்பேனா?


- ரெங்க ராஜன்