செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

குக்கூ இன் தி குரோ நெஸ்ட்

இசையால் வசமாகா உலகமேது என்று டி.எம்.ஸ் அவர்கள் பாடியது போல, பரபரப்பான இந்த இயந்திர வாழ்க்கையில் நமக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் தருவது இசை தான். இசை, மொழி நாடு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ரசிக்க கூடியது. இங்கு நம் தமிழகத்தில், வேற்று மொழியை சேர்ந்த பாடகர்கள் முத்திரை பதித்து வருகின்றனர். வட மாநிலத்தில் இருந்து வந்து, நம் கூட்டில் பாடும் கான குயில்கள் உதித் நாராயண் மற்றும் சாதனா சர்கம் பற்றி ஒரு பதிவு. இவர்கள் ஹிந்தியில் பின்னணி பாடல்கள் பாட ஆரம்பித்து, இங்கு தென்னகத்தில் முன்னணியாக திகழ்கின்றனர்.

உதித் நாராயண் இந்தி, உருது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா மற்றும் , அஸ்ஸாமி மொழித் திரைப்படங்களில் பல பாடல்கள் பாடியிருக்கிறார். உதித், இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை பெற்றவர். இவர் முதன் முதலாக தமிழில் காதலன் திரைபடத்தில் "காதலிக்கும் பெண்ணின் கையை தொட்டு நீட்டினால்" என்ற பாடலை SBP உடன் சேர்ந்து பாடினார். பிறகு இவர் பாடிய குலுவாலிலே (முத்து), காசு மேல (காதலா காதலா), காதல் பிசாசே (ரன்), இத்துனுண்டு முத்தத்துல (தூள்) மற்றும் விஜய் பாடல்களான கொக்கர கொக்கரக்கோ, அட என்னத்த சொல்வேனுங்கோ, அச்சச்சோ புன்னகை, வாடி அம்மா ஜக்கம்மா போன்ற டப்பாங்குத்து பாடலை பாடி புகழ் பெற்றவர். 

அதை போல இவர் பாடிய மெலடி பாடலான சஹானா (சிவாஜி) மற்றும் எங்கேயோ பார்த்த மயக்கம் (யாரடி நீ மோகினி) போன்ற பாடல்கள் ரசிக்கத்தக்கவை. குறிப்பாக, எங்கேயோ பார்த்த மயக்கம் பாடலை அருமையாக பாடி கலக்கி இருப்பார். அந்த பாடல் வரிகளும் மற்றும் உதித் குரலும் நன்றாக இருக்கும் (இந்த இடத்தில் இன்னும் நிற்க இதயம் கூட ஏங்குதே....) அந்த பாடலின் இசை, உதித் குரல், டீம் லீடராக வரும் நயன்தாரா தனுஷின் தவிப்பு, மழை காலம், சிறுவர்களுடன் தனுஷின் ஆட்டம் மிகவும் நன்றாக இருக்கும். அந்த நிலை அறிவை மயக்கும் மாய தாகம் போன்றது.

இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்

உதித் பாடும் போது ஒரு லயம் (sweetness) இருக்கும், உதரணமாக இந்த பாடலில் "மயக்கம்" என்று உச்சரிக்கும் போதும், காதல் பிசாசே பாடலில் "பரவாயில்லே" உச்சரிக்கும் போதும் அறியலாம். ஆனால் சில சமயம் அந்த உச்சரிப்பு ஏடாகூடமாக ஆனதுண்டு. பிரசாந்த் மற்றும் கரண் நடித்த ஒரு படத்தில் "ஈஸ்வரா வானும் மண்ணும்.." என்று வரும் பாடலின் இடையே, "பிரியமான பொண்ணை ரசிக்கலாம் தப்பில்லே" என்று பாடும் போது "பெரியமாவின் பொண்ணை......" என்பது போல அவர் உச்சரிப்பு அமைந்திருக்கும். பிறகு ரிரேகார்டிங் பண்ணி சற்று தெளிவாக பாட சொன்னார்களாம். (வாரமலர் எலிசா சொன்னதாக நியாபகம்)

*****

அடுத்த கானக்குயில் சாதனா சர்கம், இவரும் பல இந்திய மொழிகளில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி இருக்கிறார். ராஜா மற்றும் ரஹ்மான் அவர்களின் ஆஸ்தான பாடகி. அழகி படத்தில் இவர் பாடிய "பாட்டு சொல்லி பாட சொல்லி" என்ற பாடல் இவருக்கு தேசிய விருது வாங்கி தந்தது. இந்த பாடலில் ஒரு மெல்லிய சோகம், தவிப்பு....ராஜாவின் இசையில் நன்றாக பாடி இருப்பார். 

பிறகு அலைபாயுதே படத்தின் சிநேகிதனே பாடல் மூலம் மிகவும் புகழடைந்தார். ரஹ்மான் இசையில் அருமையாக பாடி இருப்பார். முதல் சரணத்தில் நாயகி தனது தேவையையும்...இரண்டாவது சரணத்தில் தன் சேவையையும் வெளிபடுத்துவார். வைரமுத்து வரிகளில் சாதனா அருமையாக பாடி இருப்பார். .ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி சேவகம் செய்ய வேண்டும் (தேவை).....உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன் (சேவை).

இவர் தனியாக பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. மேலே சொன்ன..பாட்டு சொல்லி, சிநேகிதனே மற்றும் மன்மதனே, கண்ணன் வரும் வேலை, கொஞ்சும் மைனாக்களே, அது தவிர இவர் பாடிய டூயட் பாடல்களும் கேட்க அருமையாக இருக்கும், SPB உடன் "சுவாசமே" (தெனாலி), ஜேசுதாசுடன் "நெஞ்சே நெஞ்சே" (ரட்சகன்), , சங்கர் மகாதேவனுடன் "குறுக்கு சிறுத்தவளே"(முதல்வன்), ஹரிகரனுடன் "தவமின்றி கிடைத்த வரமே" (அன்பு) என்று சொல்லி கொண்டே போகலாம். 

உதித் போல இவரது குரலிலும் ஒரு லயம் உண்டு. குறிப்பாக இவர் அய்யா என்று உச்சரிக்கும் போது கேட்க அருமையாக இருக்கும்.

முதல்வன் படத்தில் குறுக்கு சிறுத்தவளே பாடலில்

உசிர் என்னோட இருக்கையிலே நீ மண்ணோடு போவேதேங்கே
அட உன் ஜீவனில் நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூட குழம்புமாய்யா

பிறகு ஆயுத எழுத்து படத்தில் சண்டகோழி பாடலில், கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா அய்யா... யா.

அடுத்து நியு படத்தில் காலையில் தினமும் கண்விழித்தால் பாடலில், தாய்க்கு பின் தாரம் நான் தானய்யா. 

இறுதியாக ஐயா படத்தில் ஒரு வார்த்தை சொல்ல - பாடலில், 

நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதய்யா......வேப்ப மரம் சுத்தி வந்தேன் அரச மரமும் பூத்ததய்யா 

இந்த "ஒரு வார்த்தை" பாடல் தமிழ் நாட்டு இளைஞர்களை கொள்ளை அடித்த பாடல்....பாடலின் ஆரம்பத்தில் நாயகி செம்மண் பூமியில் சிகப்பு கலர் சேலை + குதிரை வால் சிகை அலங்காரம் செய்து, மூச்சிரைக்கை ஓடி வந்து....நாயகனை பார்த்து பரவசத்துடன் "ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்" என்று பாடுவார். அதை பார்க்கும் போது, ஏதோ நாயகி நம்மை பார்த்து பாடுவதாக ஒரு மயக்கம். (அங்கே என்ன மாப்ளே சத்தம்......சும்மா பேசிகிட்டு இருக்கேன் மாமா). இந்த பாடலின் வெற்றிக்கு 100% கிரடிட் பாடகி மற்றும் நாயகிக்கு மட்டும் தான் வேணுமென்றால் பரத்வாஜ், ஹரி மற்றும் சரத் இவர்களுக்கு ௦0.1% கிரடிட் கொடுக்கலாம்.

உதித் பாடிய "ஈஸ்வரா" பாடலின் லயம் (பிரியமான பொண்ணை ரசிக்கலாம்) ஏடாகூடமாக ஆனது போல, சாதனா பாடிய ஒரு பாடலில் அவ்வாறு அமைந்ததுண்டு, பதிவின் நீளம் கருதி நீக்கி விட்டேன் (எஸ்கேப்). மொழி தெரியாமல் இவர்கள் சந்தர்பங்களை மட்டும் புரிந்து கொண்டு பாடுவது வியப்படைய செய்கிறது.

அது போல, வேற்று மொழி பிரிவை சார்ந்த TMS ஐயா (சௌராஷ்டிரா), SPB அவர்கள் (தெலுங்கு), ஜேசுதாஸ் அவர்கள் (மலையாளம்) மற்றும் பலர் தமிழ் மொழி பாடல்களை மிக அருமையாக பாடியவர்கள். இவர்கள் பாடிய பாடல்கள் நம் வாழ்வில் உள்ளத்தோடும், உயிரோடும் கலந்தவை. இவர்களை பற்றி சொல்ல இந்த பதிவு போதாது, ஒரு புத்தகமே எழுத வேண்டும். இசை என்பது மொழி மற்றும் நாடு கடந்து ரசிக்க படுவது. 

கொசுறு I : CSK பிராவோ (வெஸ்ட் இண்டிஸ்) நமது கானா பாலா உடன் சேர்ந்து உலா என்னும் படத்தில் பாட இருக்கிறார் 

கொசுறு II : ஜேசுதாஸ் பாடிய அனைத்து தமிழ் பாடல்களும் அருமையாக இருக்கும். அம்மா என்று அழைக்காத, கல்யாண தேனிலா...எவர் கிரீன் பாடல்கள். இவர் பாடிய ஆன்மீக பாடலான "ஹரிவராசனம் விஸ்வமோஹனம்" கேட்கும் போது எல்லா கவலைகளையும் மறந்து மன நிம்மதி கிடைக்கும். நிறைய பேர் இந்த பாடலை ரிங்/காலர் டோனாக வைத்திருப்பார்கள். சபரிமலை ஐயப்ப சாமி கோவில் நடை சாத்தப்படும் போது இந்த பாடல் ஒலிபரப்படுகிறது. அது போல குருவாயூர் கிருஷ்ணன் மேல பக்தி கொண்டு ஜேசுதாஸ் பாடிய பாடல்கள் மெய் சிலிர்க்க வைக்கும். ஆனால் இவர் இந்த கோவிலுக்குள் சொல்வதற்கு கேரளா அரசாங்கம் அனுமதி கொடுக்கவில்லை. சபரிமலைக்கு கூட, மாலை அணிந்து இந்து என்ற அடையாளத்துடன் போக கட்டாய படுத்த பட்டார். பிறப்பால் கிருத்துவரான ஜேசுதாஸ் அவர்களுக்கு இந்து கோவில்களில் அனுமதி மறுப்பது கண்டனத்துக்குரியது. கேரள அரசிடம் குருவாயூர் கோவிலுக்கு செல்வதற்கு ஒரு சாவல் விடுத்தார். நீங்க என்னடா என்னை தடுப்பதற்கு, நான் கோவில் முன்பு பாடல் பாடுகிறேன், குருவாயூரப்பேனே எனக்கு தரிசணம் கொடுப்பார் என்று, ஆனால் அரசு இந்த விஷபரிட்சைக்கு சம்மதிக்கவில்லை. இது போன்ற ஆகம விதிகளை தகர்த்தெறிய வேண்டும். கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர். வாலி சொன்ன வரிகள் தான் நியாபகத்திற்கு வருகிறது "சமயம் என்று பார்த்தால், கடவுள் கிடையாது" (கல்லை மட்டும் கண்டால்...தசாவதாரம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக