சனி, 28 டிசம்பர், 2013

உன்னால் முடியும் பெண்ணே....

நந்தினி.....தற்பொழுது தமிழகத்தில் மது விலக்கு கோரி நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் சட்ட கல்லூரி மாணவி. இவரின் நோக்கம் நிறைவேறுவது சற்று கடினம் தான். மது பழக்கம், தமிழகத்தில் வேருன்றி விட்டது அது மட்டுமல்ல, அரசுக்கு அதிக வருவாயை ஈட்டி கொடுப்பதில் முதன்மையாக இருப்பது மது கடைகள் தான். எனவே பூரண மது விலக்கு அமல் படுத்துவதேன்பது சற்று முடியாத காரியம். ஆனால் முயன்றால் எதுவானாலும் முடியும். சற்று வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த மாணவியின் போரட்டத்தை முக நூல் தவிர மற்ற ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விட்டனர். பல சமுக போராட்டங்களுக்கு அதரவு கொடுக்கும் மக்கள், அரசியல் கட்சிகள்...இந்த மாணவியின் பிரச்சனயை கண்டு கொள்ளவில்லை.

இதற்கு முன்பு சசி பெருமாள் என்ற என்பது வயது முதியவர் பூரண மது விலக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கும் இதே கெதி தான். அவரை வலு கட்டயமாக உண்ணாவிரதத்தை கைவிட செய்தனர். ஆனால் நந்தினி தன் தந்தையுடன் விடா பிடியுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். போன செவ்வாய் கிழமை முதல்வரை சந்திக்க சென்னைக்கு செல்லும் வழியில் தடுத்து நிறுத்த பட்டு...இப்பொழுது மதுரையில் வைகை ஆற்றில் (அழகர் இறங்கும் இடத்தில்) உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். ஏன் இந்த போராட்டம்...கூக்குரல், நம் சமுகத்தில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்த வில்லை???

ஏதாவது ஒரு விஷயத்தை செய்வதற்கு இல்லை அதை ஆதரித்து பேசுவதற்கு...கொஞ்சம் யோக்கிதை வேணும். இந்த விஷயத்தை பொறுத்தமட்டில், எனக்கு அது இல்லை. நானும் மது அருந்தி இருக்கிறேன். அடிக்கடி இல்லை...என்றாவது ஒரு நாள் தான். அலுவலக நண்பர்களின் கட்டாயத்தினால், சொந்த ஊரில் விழா காலங்களில் மற்றும் ஈடு செய்ய முடியாத சில உறவுகளின் கண்டோலன்ஸ் சமயத்தில்....அளவாக அருந்தியதுண்டு. அது ஒன்றும் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுவதில்லை. இருந்தாலும்..இந்த மாணவியின் போராட்டம் நமது செயலையும் மீறி கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. சுமார் ஒரு ஆறு மாத காலமாக போராடி வருகிறார். ஏன் இவளின் போராட்டம் அனைவரிடமும் போய் சேரவில்லை....டெல்லி மாணவிக்காக போராடிய மக்கள் கூட இந்த பெண்ணின் போராட்த்திற்காக குரல் கொடுக்க வில்லை.

நகர் புறங்களில்...கார்பரேட் மற்றும் மல்டி லெவல் நிறுவனங்களில் பணி புரிந்து ஐந்து இலக்க ஊதியம் வாங்கி கொண்டு வார இறுதியில் டிஸ்கோதே ஆடும் பல நபர்களுக்கும், நட்சத்திர விடுதியில் குடியும் கும்மாளமாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் மற்றும் லஞ்சம், ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளை அடித்து பண்ணை வீடுகளில் கூத்து கும்மாளம் அடிக்கும் சில அரசியல் வாதிகளுக்கும்.... இந்த பெண் நடத்தும் மது விலக்கின் அருமை தெரியாது.


கிராம புறங்களில் பணி புரியும் ஆண்கள் தின கூலியாக 80 ருபாய் வாங்கி.....குடும்ப செலவிற்காக ஒன்றும் கொடுக்காமல், அதை அப்படியே டாஸ்மாகில் கொடுத்து மது அருந்தி தெருவில் மயங்கி....குடும்பத்தை தெருவில் நிற்கதியாக நிற்க வைத்து விடுகிறான். அந்த குடும்பம் அடையும் அவஸ்தைகளை சொல்லி மாளாது. உன்னால் முடியும் தம்பி படத்தில் கவிஞர் புலமை பித்தன் சொல்லி இருப்பார் "குடிச்சவன் போதையில் நிற்பான்....குடும்பத்தை வீதியில் வைப்பான்". குடி பழக்கத்தினால் அவனுக்கு காசும் போயி, உடல் நலமும் கெட்டு விடுகிறது...பிறகு அந்த குடும்பம் பல இன்னல்களை சந்திக்கிறது. மேலும் சிலர் அளவுக்கு மீறி குடித்து...சுய நினைவு இழந்து சில வன்முறை மற்றும் குற்ற செயல்களில் ஈடு படுகின்றனர்.

இந்த கொடிய பழக்கத்தில் இருந்து விடுபட தான்...நந்தினி போராடி வருகிறார். ஆனால், அரசு இவரை கைது செய்து திருப்பி மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளது. வருகின்ற புத்தாண்டுக்கும்...பொங்கலுக்கும், மதுவின் விற்பனையை அதிகரிக்க அரசு திட்டங்கள் தீட்டி வருகிறது. இதற்கு தடையாக இருக்கும் இவரின் போராட்டத்தை கைவிட சொல்லி அரசு வற்புறுத்துகிறது. இப்போது வேணுமானல் நந்தினியின் போராட்டம் முறியடிக்கபடலாம். ஆனால் இவர் போட்ட இந்த விதை நிச்சயமாக விருட்சமாக வளர்ந்து வெற்றி கொடி கட்டும்.

உன்னால் முடியும் தம்பி பட பாடல் (சில மாற்றங்களுடன்)
உன்னால் முடியும் பெண்ணே. .

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்
சாரய கங்கை காயாதமா
ஆள்வோர்கள் போடும் திட்டங்கள் யாவும்
மது விலக்கினை ஏற்காதம்மா
குடிச்சவன் போதையில் நிற்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளம்மா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தானே
கட்சிக் கொடி ஏறுது பெண்ணே
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யணும்

உன்னால் முடியும் பெண்ணே. .பெண்ணே.
இங்கு எல்லோரும் உந்தன் பின்னே

எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்.

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி..


ரெங்க ராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக