செவ்வாய், 17 டிசம்பர், 2013

ஆமாம் பாட்டி

ஒரு நாள் எங்க ஊர் பொதிகை மண்டலம் புளியங்குடியில் பலசரக்கு வாங்க கடைக்கு சென்று இருந்தேன். அச்சமயம் ஒரு பாட்டி வந்து கடைக்காரரிடம், சோப்பு கேட்டாங்க.....அந்த நகைச்சுவை உரையாடலை கீழே காணவும். 

பாட்டி: மேலுக்கு போடுற சோப்பு ஒன்னு கொடுப்பா

கடைக்காரர்: (சற்று குழப்பத்துடன்), பாட்டி குளிக்கிற சோப்பா வேணும்

பாட்டி: ஆமாம்

கடைக்காரர்: சரி, என்ன சோப்பு வேணும் பாட்டி

பாட்டி: ஆமாம்

கடைக்காரர்: பாட்டி, குளிக்கிற சோப்புல என்ன சோப்பு வேணும்

பாட்டி: ஆமாம்

கடைக்காரர்: ஐயோ பாட்டி, குளிக்கிற சோப்புல நிறைய கம்பெனி சோப்பு இருக்கு, உனக்கு என்ன வேணும்

பாட்டி: ஆமாம்

கடைக்காரர்: (கோபத்துடன்) பாட்டி, எதை கேட்டாலும் ஆமாம்.....ஆமாம் னு சொல்லி கடுப்பேத்துரே, உனக்கு என்ன சோப்பு வேணும்னு சொல்லி தொலை

பாட்டி: ஆமாம்

கடைக்காரர்: என்ன ஆமாம், ஓமாம் னு சொல்லி உயிரை வாங்காதே.....என்ன சோப்பு வேணும் தெளிவா சொல்லு.

பாட்டி: ஆமாம் சோப்பு......குட்டியா இருக்கும்லா.....அதான்பா வேணும்.

இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த எனக்கு அப்ப தான் தோணிச்சு.....பாட்டி "ஹமாம்" சோப்பை தான் ஆமாம் சோப்பு என்று சொன்னது தெரிய வந்தது. கடைக்காரரிடம் விவரத்தை சொன்ன உடனே....ஒரு சாம்பிள் ஹமாம் (சின்ன சைஸ்) சோப்பை எடுத்து பாட்டி கையில கொடுத்தார். உடனே பாட்டி, இது தான் நான் கேட்டா ஆமாம் சோப்பு...இதை சரியா எடுத்து கொடுக்குறதுக்குள்ள, மனுஷியை இந்த பாடு படுத்துற. அந்த கண்ணாடி தம்பி (இட்ஸ் மீ) எப்டி சரியா சொல்லிச்சு  ....நீயும் இருக்கிய....என்று கடைக்காரரிடம் சொன்னது.

உடனே கடைக்காரர், சரி முதல்ல இடத்தை காலி பண்ணு...இந்தா சோப்பை எடுத்துகிட்டு போத்தா....இந்த வயசிலும் உனக்கு சோப்பு ஒரு கேடா? என்று சொன்னார். இறுதியாக பாட்டி, இந்த கட்டைக்கு எதுக்குபா சோப்பு, ஊர்ல இருந்து பேச்சி வந்துருக்கா என்று தனது மகள் வரவை சொல்லி, கூட கூட்டி வந்த பேரனுக்கு நாலனாக்கு சாக்லேட் வாங்கிட்டு நடையை கட்ட ஆரம்பித்தது.

இதே மாதிரி எங்க பாட்டியும் "அனாசின்" மாத்திரை கேட்டா....கடைக்காரரிடம் போயி, "அன்னாச்சி" மாத்திரை கொடுங்க என்றும் கேட்டு கடைக்கார அண்ணாச்சியை கன்பியூஸ் பண்ணியதும் இருக்கு


சில சமயம்,
ஆதித்ய காமடியை விட....அப்பத்தா காமடி நல்லா இருக்கு

- எஸ். ரெங்க ராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக