செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தேடல்


மனிதனாக பிறந்த நாம் அனைவரும் வாழ்க்கையில் எதையாவது ஒன்றை தேடி கொண்டிருக்கிறோம். உதாரனமாக படிப்பதற்கு நல்ல கல்லூரியை தேடுகிறோம், படித்தவுடன் வேலையை தேடுகிறோம், வேலையில் சேர்ந்தவுடன் பொருளை தேடுகிறோம், கொஞ்சம் பொருள் கிடைத்தவுடன் வரன் தேடுகிறோம், திருமணதிற்கு பிறகு நிம்மதியை தேடுகிறோம்  இறுதியில் ஆன்மீக தேடலுடன் வாழ்க்கை முற்று பெறுகிறது.

தேடல் இல்லாத வாழ்க்கை தேங்கி போன குட்டை மாதிரி. நீங்களும் கிணற்றில் போட்ட கல்லு போல ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். அப்பாடி இது வரை படிச்ச படிப்பு போதும், சேர்த்து வச்ச காசு போதும் என்று இருந்து விடாதீர்கள். மேற்கொண்டு அறிவையும் பொருளையும் தேடி கொண்டிருங்கள் மேலும் அதனை மற்றவருக்கு பயன்படும் படி செய்யுங்கள். சும்மா இருக்காதீங்க.....அப்படி சும்மா இருந்த கூட, கூகிள் சென்று நல்ல விஷயமா தேடி பாருங்கள் 

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் என்று வைரமுத்து சொல்லி இருக்காரு.

வாழ்க்கையின் வேர்களோ
மிக ரகசியமானது

ரகசியம் காண்பதோ
மிக அவசியமானது



தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்

தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்


ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே

(இன்னிசை பாடி வரும்....)

எஸ். ரெங்க ராஜன்

கொசுறு : உணர்ச்சிவசப்பட்டு இந்த பாட்டை சத்தம் போட்டு பாடாதீங்க. பின்ன சிம்ரன் மாதிரி யாராச்சு ஓடி வந்து நீங்க குட்டியா, உங்க பேறு குட்டியா என்று கேட்டுற போறாங்க 

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

காதலர் தினம்

நாள் நெருங்கி விட்டது...எப்படியாவது என் காதலை அவளிடம் தெரிவித்து விட வேண்டும். பதிலுக்கு என்ன சொல்லுவா என்று தெரிய வில்லை. காதல் ஒன்றும் எனக்கு புதிதல்ல, ஆடோகிராப் சேரன் மாதிரி இரண்டு மூன்று பெண்களிடம் காதல் வயப்பட்டு பிறகு எல்லாம் ஊற்றி கொண்டது. அதற்கு பிறகு காதலே வேண்டாமென்று முடிவெடுத்து விட்டேன். காதல் என்றால் தீண்டாமை போல ஒரு பெருங்குற்றம், பாவம் மற்றும் மனித தன்மையற்ற செயல் என்று ஒதுங்கி இருந்தேன். ஆனால் தற்சமயம், காதல் மீண்டும் துளிர் விட்டிருக்கிறது. அந்த பெண்ணை தினமும் சந்திக்கிறேன்..எங்க ஏரியா தான். அந்த பெண்ணை காதலித்தாலும் வாயை திறந்து நான் உன்னை விரும்புகிறேன் என்று சொன்னது கிடையாது. எத்தனை நாள் தான் நடிகர் முரளி மாதிரி காதலை சொல்லாமல் இருப்பது, இந்த காதலர் தினத்தில் எப்படியாவது சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.

இன்று காலையில் அவளை பார்த்து எனது விருப்பத்தை சொல்லி விட்டேன். அதற்கு அவளின் ரியாக்சன் என்னவென்றால்....ஸ்ஸ் யப்பா இது என்ன புதுசா இருக்கு, எனக்கு நெறைய வேல கிடக்கு...அடுப்புல சாதம் வச்சுருக்கேன், உங்க அழுக்கு துணிய முக்கி வச்சுருக்கேன் பிறகு துவைக்கணும், இன்னைக்கு வேற வெள்ளி கிழமை (14.02.2014) வீடு வாசல் கழுவி எடுக்கணும். உங்களுக்கு குளிக்க வேற வெந்நீர் போடணும்...இப்ப வேற நீங்க காமெடி பண்ணிக்கிட்டு இருக்காதிங்க. ஆபிசுக்கு லேட் ஆகிடுச்சு..போயி சீக்கிரம் கிளம்புங்க ராசா என்று சொல்லி விட்டு ஒரு புன்சிரிப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறாள். நான் சொல்ல வேண்டிய காதலை அவள் செயலினால் உணர்த்துகிறாள். பொதுவா மனைவி தான் ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் குழந்தை - இரண்டாம் தாய் - கடைசி காதலி 

புதுசா காதலிக்கிறவங்களுக்கு தான் பாஸ்...வருசத்துக்கு ஒருமுறை காதலர் தினம் வருகிறது, கல்யாணம் ஆனவங்களுக்கு வருசமெல்லாம் காதலர் தினம் தான். ஸோ..லவ் யூ டி மை பொண்டாட்டி.

ஒரு தகப்பன் போல இருப்பேன்
ஒரு தாய போலவும் இருப்பேன்
உன் நண்பன் போல நடப்பேன்
அந்த கடவுள் போல காப்பேன்
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்

வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன், தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி




வியாழன், 13 பிப்ரவரி, 2014

ஹெட்ஸ் ஆப் தொப்பி மேன்

பொதுவாக யாரவது வியத்தகு சாதனை செய்துவிட்டால் அதனை பார்ப்பவர்கள் உடனே தான் அணிந்திருக்கும் தொப்பியை (Hat) கழற்றி சிரம் தாழ்த்தி வாழ்த்து சொல்லுவார்கள். தொப்பி போடாத பார்வையாளர்கள் ஹெட்ஸ் ஆப் (Hats off) என்று கூறி வாழ்த்துவார்கள். அந்த தொப்பியை தனது மகுடமாக அணிந்திருக்கும் பாலு மகேந்திரா இன்று காலமாகி விட்டார். ஒரு ஒளிப்பதிவாளராக வாழ்க்கையை தொடங்கி, இயக்குனராக வலம் வந்து, இறுதியாக நடிகராக (தலைமுறைகள்) வெற்றி வாகை சூடியவர். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவர் இயக்கத்தில் "நீங்கள் கேட்டவை" படத்திலிருந்து "கனவு காணும் வாழ்க்கை யாவும்" பாடல் வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலிப்பதாக இருக்கும்.

கனவு காணும் வாழ்க்கை யாவும் 
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று 

கரையைத் தேடும் ஓடங்கள்

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன?
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன?
கனவுகள் வாங்கும் பை தானே

(கனவு காணும் வாழ்க்கை யாவும்...) 

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்

(கனவு காணும் வாழ்க்கை யாவும்...)

திங்கள், 10 பிப்ரவரி, 2014

நையாண்டி - பகுதி 5

தமிழில் அணியிலக்கணம் என்ற ஒரு பாடம் இருக்கிறது. அதில் தற்குறிபேற்ற அணி, உருவக அணி, வஞ்ச புகழ்ச்சி அணி மற்றும் பல அணிகள் இருக்கின்றன. இந்த அணிகளை பற்றி எடுத்துரைக்க பழைய சங்க கால பாடல்களை உதாரனமாக சொல்லி கொடுப்பார்கள். அந்த வகையில் தற்குறிபேற்ற அணி தெரிந்து கொள்ள கீழ்கண்ட சிலப்பதிகார பாடலை கூறுவார்கள்.

"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட" 


அதாவது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை கூறுவது தற்குறிபேற்ற அணியாகும். சிலப்பதிகாரத்தில் கோவலன் மதுரை மாநகரில் கொல்லபடுவான் என்று முன்னே அறிந்த கவிஞர் (இளங்கோவடிகள்), தோரண வாயிற் கொடிகளின் இலைகள் இயல்பாக அசைவதை "கோவலனை இங்கு வர வேண்டாம்" என்று மறித்து காட்டுவதாக கூறியிருப்பார். அதுபோல, மிதிலை நகரத்தில் உச்சியில் பறந்த கொடிகள் இராமனை அழைப்பது, கைகளை நீட்டி வருக வருக என்று கம்பரும் இராமாயணத்தில் கூறி இருப்பார் (பாடல் சரியாக தெரிய வில்லை)

கம்பரோ இல்லை இளங்கோவடிகள் கூறிய இலக்கியம் சார்ந்த பாடல்களை மனதில் வைத்து கொள்ள கடினமாக இருக்கலாம். அதற்கு பதிலாக எளிமையான உதாரணங்களை கூறினால் மனதில் சுலபமாக புரிந்து கொள்ளலாம். உதாரனமாக பின்வரும் வாக்கியத்தை கவனிக்கவும்.

உனது பிரிவை நேற்று இரவு புற்களிடம் கூறினேன்
மறுநாள் காலை அவைகளும் கண்ணீர் வடித்திருந்தன.


தலைவியை பிரிந்த தலைவன் தனது தவிப்பை தோட்டத்தில் உள்ள புற்களிடம் கூற, மறுநாள் காலையில் அவைகள் கண்ணீர் வடித்தது. இயல்பாக புற்களின் மேலிருக்கும் பனித்துளியை...கண்ணீராக நினைத்து ஒப்பிடுகிறேன். மேலும் இதையும் விட எளிமையாக மற்றும் இனிமையாக ராஜபார்வை திரைப்பட பாடலில் கேட்டிருக்கிறேன்.

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.


இது தவிர நம் அன்றாட வாழ்கையில் அணியிலக்கனத்தை காண முடிகிறது. இங்கே மதுரையில் அடிக்கப்படும் போஸ்டர் மற்றும் பிலக்ஸ்சில் பார்க்கலாம். கட்சியில் ஸ்டாலின் ஆதிக்கத்தால் அமைதியாய் இருக்கும் அழகிரியை பார்த்து அவரின் ஆதரவாளர்கள் "முகிலை கிழித்து வெளியே வா முழுமதியே" என்றும், அவரின் பிறந்த நாளன்று "மதுரா என்றால் கண்ணன்....மதுரை என்றால் அண்ணன்" என்றும் சொல்வதில் உருவக அணி மற்றும் உவமேய அணிகளை காணலாம். அது போல, சோனியா காந்தியை பார்த்து மணிமேகலை என்று கலைஞரும், சிறையில் இருந்து வெளிவந்த கனி மொழியை பார்த்து "நீ பூங்கொடி அல்ல போர்க்கொடி" என்றும், பிரமேலதா விஜயகாந்தை "தென்னாட்டு ஜான்சி ராணி" என்றும் கழக உடன் பிறப்புகள் சொல்வதெல்லாம் இதற்கு சான்றாகும். மேலும் விஜயகாந்தை கருப்பு எம்.ஜி.ஆர் என்றும் கருப்பு ஞாயிறு என குறிப்பிடுவது "இல் பொருள் உவமை அணியை" குறிக்கிறது.

அது தவிர இந்த வஞ்ச புகழ்ச்சி அணியை பரவலாக கேட்கலாம். நம்ம சும்மா பாடின போதும், மாப்ளே உன் வாய்ஸ் அப்படியே யேசுதாஸ் மாதிரியே இருக்குதுனு அள்ளி விடுவாங்க. பொதுவாக அலுவகத்தில், தல கலக்கிடீங்க....உங்கள மாதிரி முடியுமா...சான்சே இல்லைனு புகழுற மாதிரி இகழ்வார்கள். இவ்வாறாக அணியிலக்கனத்தை அன்றாட வாழ்வில் காணலாம்.

(புலிகேசி மற்றும் அமைச்சரின் நையாண்டி)

புலிகேசி: அமைச்சரே, தமிழ் இலக்கணத்தில் அடுக்கு தொடர் மற்றும் இரட்டை கிளவி பற்றி உமக்கு தெரியுமா?

அமைச்சர்: மன்னா, நீங்கள் சொல்லும் இந்த சொற்றடரில் இரண்டு சொற்கள் அடுத்தடுத்து வரும். அவற்றுள் அடுக்கு தொடர் பிரித்தால் பொருள் தரும் (வாழ்க...வாழ்க) ஆனால் இரட்டை கிளவி பிரித்தால் பொருள் தராது (சல..சல)

புலிகேசி: பரவாயில்லை மிக சரியாக சொன்னீர். அணியிலக்கணம் போல இந்த வாக்கியங்களையும் நாம் அன்றாட வாழ்விலும் பயன் படுத்துகிறோம். குறிப்பாக இல்லத்தரசிகளின் கோரிக்கைகள் அடுக்கு தொடராக இருக்கின்றன....ஆனால் ஆனந்த மஞ்சத்தில் மட்டும் அர்த்தமற்ற இரட்டை கிளவியாக இருக்கின்றன


அமைச்சர்: பலே மன்னா..அது மட்டுமல்ல, இங்கு நீங்கள் செய்யும் அக்கபோறினால் அரண்மனை கோஷங்கள் எல்லாம் அடுக்கு தொடராகவும்...அந்தபுர விஷமங்கள் எல்லாம் இரட்டை கிளவியாக தான் ஒலிக்கின்றன.

காவலன்: மன்னா..தங்களை காண புலவர் பாணபத்திர கோணாண்டி வந்துள்ளார். 

அமைச்சர் : மன்னா...தங்களை பற்றி ஏற்கனவே பாட வந்த பாணபத்திர ஓணாண்டி-யை போல தற்போது அவரது தம்பி வேறு பாடலுடன் உங்களை பாடி மகிழ்வித்து பொற்கிழி வாங்க வந்திருகிறார். வர சொல்லுங்கள். 

(புலவரின் பாடலும்...மன்னரின் கோபமும் அடுத்து வரும் நையாண்டி தொடரில்)

கொசுறு : 80-களில் வந்த கில்மா பாடல்களில் இரட்டை கிளவி சொற்களை கேக்கலாம்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

குக்கூ இன் தி குரோ நெஸ்ட்

இசையால் வசமாகா உலகமேது என்று டி.எம்.ஸ் அவர்கள் பாடியது போல, பரபரப்பான இந்த இயந்திர வாழ்க்கையில் நமக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் தருவது இசை தான். இசை, மொழி நாடு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ரசிக்க கூடியது. இங்கு நம் தமிழகத்தில், வேற்று மொழியை சேர்ந்த பாடகர்கள் முத்திரை பதித்து வருகின்றனர். வட மாநிலத்தில் இருந்து வந்து, நம் கூட்டில் பாடும் கான குயில்கள் உதித் நாராயண் மற்றும் சாதனா சர்கம் பற்றி ஒரு பதிவு. இவர்கள் ஹிந்தியில் பின்னணி பாடல்கள் பாட ஆரம்பித்து, இங்கு தென்னகத்தில் முன்னணியாக திகழ்கின்றனர்.

உதித் நாராயண் இந்தி, உருது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா மற்றும் , அஸ்ஸாமி மொழித் திரைப்படங்களில் பல பாடல்கள் பாடியிருக்கிறார். உதித், இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை பெற்றவர். இவர் முதன் முதலாக தமிழில் காதலன் திரைபடத்தில் "காதலிக்கும் பெண்ணின் கையை தொட்டு நீட்டினால்" என்ற பாடலை SBP உடன் சேர்ந்து பாடினார். பிறகு இவர் பாடிய குலுவாலிலே (முத்து), காசு மேல (காதலா காதலா), காதல் பிசாசே (ரன்), இத்துனுண்டு முத்தத்துல (தூள்) மற்றும் விஜய் பாடல்களான கொக்கர கொக்கரக்கோ, அட என்னத்த சொல்வேனுங்கோ, அச்சச்சோ புன்னகை, வாடி அம்மா ஜக்கம்மா போன்ற டப்பாங்குத்து பாடலை பாடி புகழ் பெற்றவர். 

அதை போல இவர் பாடிய மெலடி பாடலான சஹானா (சிவாஜி) மற்றும் எங்கேயோ பார்த்த மயக்கம் (யாரடி நீ மோகினி) போன்ற பாடல்கள் ரசிக்கத்தக்கவை. குறிப்பாக, எங்கேயோ பார்த்த மயக்கம் பாடலை அருமையாக பாடி கலக்கி இருப்பார். அந்த பாடல் வரிகளும் மற்றும் உதித் குரலும் நன்றாக இருக்கும் (இந்த இடத்தில் இன்னும் நிற்க இதயம் கூட ஏங்குதே....) அந்த பாடலின் இசை, உதித் குரல், டீம் லீடராக வரும் நயன்தாரா தனுஷின் தவிப்பு, மழை காலம், சிறுவர்களுடன் தனுஷின் ஆட்டம் மிகவும் நன்றாக இருக்கும். அந்த நிலை அறிவை மயக்கும் மாய தாகம் போன்றது.

இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்

உதித் பாடும் போது ஒரு லயம் (sweetness) இருக்கும், உதரணமாக இந்த பாடலில் "மயக்கம்" என்று உச்சரிக்கும் போதும், காதல் பிசாசே பாடலில் "பரவாயில்லே" உச்சரிக்கும் போதும் அறியலாம். ஆனால் சில சமயம் அந்த உச்சரிப்பு ஏடாகூடமாக ஆனதுண்டு. பிரசாந்த் மற்றும் கரண் நடித்த ஒரு படத்தில் "ஈஸ்வரா வானும் மண்ணும்.." என்று வரும் பாடலின் இடையே, "பிரியமான பொண்ணை ரசிக்கலாம் தப்பில்லே" என்று பாடும் போது "பெரியமாவின் பொண்ணை......" என்பது போல அவர் உச்சரிப்பு அமைந்திருக்கும். பிறகு ரிரேகார்டிங் பண்ணி சற்று தெளிவாக பாட சொன்னார்களாம். (வாரமலர் எலிசா சொன்னதாக நியாபகம்)

*****

அடுத்த கானக்குயில் சாதனா சர்கம், இவரும் பல இந்திய மொழிகளில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி இருக்கிறார். ராஜா மற்றும் ரஹ்மான் அவர்களின் ஆஸ்தான பாடகி. அழகி படத்தில் இவர் பாடிய "பாட்டு சொல்லி பாட சொல்லி" என்ற பாடல் இவருக்கு தேசிய விருது வாங்கி தந்தது. இந்த பாடலில் ஒரு மெல்லிய சோகம், தவிப்பு....ராஜாவின் இசையில் நன்றாக பாடி இருப்பார். 

பிறகு அலைபாயுதே படத்தின் சிநேகிதனே பாடல் மூலம் மிகவும் புகழடைந்தார். ரஹ்மான் இசையில் அருமையாக பாடி இருப்பார். முதல் சரணத்தில் நாயகி தனது தேவையையும்...இரண்டாவது சரணத்தில் தன் சேவையையும் வெளிபடுத்துவார். வைரமுத்து வரிகளில் சாதனா அருமையாக பாடி இருப்பார். .ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி சேவகம் செய்ய வேண்டும் (தேவை).....உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன் (சேவை).

இவர் தனியாக பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. மேலே சொன்ன..பாட்டு சொல்லி, சிநேகிதனே மற்றும் மன்மதனே, கண்ணன் வரும் வேலை, கொஞ்சும் மைனாக்களே, அது தவிர இவர் பாடிய டூயட் பாடல்களும் கேட்க அருமையாக இருக்கும், SPB உடன் "சுவாசமே" (தெனாலி), ஜேசுதாசுடன் "நெஞ்சே நெஞ்சே" (ரட்சகன்), , சங்கர் மகாதேவனுடன் "குறுக்கு சிறுத்தவளே"(முதல்வன்), ஹரிகரனுடன் "தவமின்றி கிடைத்த வரமே" (அன்பு) என்று சொல்லி கொண்டே போகலாம். 

உதித் போல இவரது குரலிலும் ஒரு லயம் உண்டு. குறிப்பாக இவர் அய்யா என்று உச்சரிக்கும் போது கேட்க அருமையாக இருக்கும்.

முதல்வன் படத்தில் குறுக்கு சிறுத்தவளே பாடலில்

உசிர் என்னோட இருக்கையிலே நீ மண்ணோடு போவேதேங்கே
அட உன் ஜீவனில் நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூட குழம்புமாய்யா

பிறகு ஆயுத எழுத்து படத்தில் சண்டகோழி பாடலில், கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா அய்யா... யா.

அடுத்து நியு படத்தில் காலையில் தினமும் கண்விழித்தால் பாடலில், தாய்க்கு பின் தாரம் நான் தானய்யா. 

இறுதியாக ஐயா படத்தில் ஒரு வார்த்தை சொல்ல - பாடலில், 

நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதய்யா......வேப்ப மரம் சுத்தி வந்தேன் அரச மரமும் பூத்ததய்யா 

இந்த "ஒரு வார்த்தை" பாடல் தமிழ் நாட்டு இளைஞர்களை கொள்ளை அடித்த பாடல்....பாடலின் ஆரம்பத்தில் நாயகி செம்மண் பூமியில் சிகப்பு கலர் சேலை + குதிரை வால் சிகை அலங்காரம் செய்து, மூச்சிரைக்கை ஓடி வந்து....நாயகனை பார்த்து பரவசத்துடன் "ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்" என்று பாடுவார். அதை பார்க்கும் போது, ஏதோ நாயகி நம்மை பார்த்து பாடுவதாக ஒரு மயக்கம். (அங்கே என்ன மாப்ளே சத்தம்......சும்மா பேசிகிட்டு இருக்கேன் மாமா). இந்த பாடலின் வெற்றிக்கு 100% கிரடிட் பாடகி மற்றும் நாயகிக்கு மட்டும் தான் வேணுமென்றால் பரத்வாஜ், ஹரி மற்றும் சரத் இவர்களுக்கு ௦0.1% கிரடிட் கொடுக்கலாம்.

உதித் பாடிய "ஈஸ்வரா" பாடலின் லயம் (பிரியமான பொண்ணை ரசிக்கலாம்) ஏடாகூடமாக ஆனது போல, சாதனா பாடிய ஒரு பாடலில் அவ்வாறு அமைந்ததுண்டு, பதிவின் நீளம் கருதி நீக்கி விட்டேன் (எஸ்கேப்). மொழி தெரியாமல் இவர்கள் சந்தர்பங்களை மட்டும் புரிந்து கொண்டு பாடுவது வியப்படைய செய்கிறது.

அது போல, வேற்று மொழி பிரிவை சார்ந்த TMS ஐயா (சௌராஷ்டிரா), SPB அவர்கள் (தெலுங்கு), ஜேசுதாஸ் அவர்கள் (மலையாளம்) மற்றும் பலர் தமிழ் மொழி பாடல்களை மிக அருமையாக பாடியவர்கள். இவர்கள் பாடிய பாடல்கள் நம் வாழ்வில் உள்ளத்தோடும், உயிரோடும் கலந்தவை. இவர்களை பற்றி சொல்ல இந்த பதிவு போதாது, ஒரு புத்தகமே எழுத வேண்டும். இசை என்பது மொழி மற்றும் நாடு கடந்து ரசிக்க படுவது. 

கொசுறு I : CSK பிராவோ (வெஸ்ட் இண்டிஸ்) நமது கானா பாலா உடன் சேர்ந்து உலா என்னும் படத்தில் பாட இருக்கிறார் 

கொசுறு II : ஜேசுதாஸ் பாடிய அனைத்து தமிழ் பாடல்களும் அருமையாக இருக்கும். அம்மா என்று அழைக்காத, கல்யாண தேனிலா...எவர் கிரீன் பாடல்கள். இவர் பாடிய ஆன்மீக பாடலான "ஹரிவராசனம் விஸ்வமோஹனம்" கேட்கும் போது எல்லா கவலைகளையும் மறந்து மன நிம்மதி கிடைக்கும். நிறைய பேர் இந்த பாடலை ரிங்/காலர் டோனாக வைத்திருப்பார்கள். சபரிமலை ஐயப்ப சாமி கோவில் நடை சாத்தப்படும் போது இந்த பாடல் ஒலிபரப்படுகிறது. அது போல குருவாயூர் கிருஷ்ணன் மேல பக்தி கொண்டு ஜேசுதாஸ் பாடிய பாடல்கள் மெய் சிலிர்க்க வைக்கும். ஆனால் இவர் இந்த கோவிலுக்குள் சொல்வதற்கு கேரளா அரசாங்கம் அனுமதி கொடுக்கவில்லை. சபரிமலைக்கு கூட, மாலை அணிந்து இந்து என்ற அடையாளத்துடன் போக கட்டாய படுத்த பட்டார். பிறப்பால் கிருத்துவரான ஜேசுதாஸ் அவர்களுக்கு இந்து கோவில்களில் அனுமதி மறுப்பது கண்டனத்துக்குரியது. கேரள அரசிடம் குருவாயூர் கோவிலுக்கு செல்வதற்கு ஒரு சாவல் விடுத்தார். நீங்க என்னடா என்னை தடுப்பதற்கு, நான் கோவில் முன்பு பாடல் பாடுகிறேன், குருவாயூரப்பேனே எனக்கு தரிசணம் கொடுப்பார் என்று, ஆனால் அரசு இந்த விஷபரிட்சைக்கு சம்மதிக்கவில்லை. இது போன்ற ஆகம விதிகளை தகர்த்தெறிய வேண்டும். கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர். வாலி சொன்ன வரிகள் தான் நியாபகத்திற்கு வருகிறது "சமயம் என்று பார்த்தால், கடவுள் கிடையாது" (கல்லை மட்டும் கண்டால்...தசாவதாரம்)